மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த கப்பலூர் தொழில் பேட்டையில் உள்ள கம்பெனியில் இரண்டரை வயது குழந்தையை கொலை செய்த தந்தை சாக்கு மூட்டைக்குள் கட்டி வைத்திருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள கோட்டையூரை சேர்ந்த ’கடற்கரை’ என்பவரது மகன் பாண்டி செல்வம் (26). இவர் மனைவி வனிதா (24). இந்த தம்பதிக்கு திருமணம் முடிந்து 5 ஆண்டுகள் ஆன நிலையில் இரண்டரை வயதில் பார்கவி என்ற பெண் குழந்தை இருந்தது.
பாண்டி செல்வம் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் தொழிற்பேட்டையில் உள்ள பெயிண்டிங் தொழிலுக்கு பயன்படுத்தப்படும் லப்பம் தயாரிக்கும் கம்பெனியில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் பாண்டிச்செல்வமும், மனைவி வனிதாவும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தனர்.வனிதா கோட்டையூரில் உள்ள தீப்பெட்டி தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். வேலைக்கு செல்லும் போது தனது மகள் பார்கவியையும் உடன் அழைத்துச் செல்வார். இதை அறிந்த பாண்டி செல்வம் தீப்பெட்டி தொழிற்சாலைக்கு சென்றால் தனது மகளுக்கு உடல் நலம் பாதிக்கப்படும் எனக் கூறி பார்கவியை தான் வேலை பார்க்கும் நிறுவனத்திற்கு தினந்தோறும் அழைத்து வந்து வைத்திருப்பார். மீண்டும் மாலையில் குழந்தையை வனிதாவிடம் விட்டு சென்று விடுவார்.
இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் பாண்டிச் செல்வம் கம்பெனியில் விளையாடிய பார்கவியை காணவில்லை என திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இன்று காலை பாண்டிச்செல்வம் வழக்கம்போல் வேலைக்கு சென்றிருந்த போது கம்பெனியில் துர்நாற்றம் வீசியதை தொடர்ந்து காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. அங்கு சென்று போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பாண்டிச்செல்வத்தின் மகள் அழுகிய நிலையில் சாக்கு மூட்டையில் கட்டி வைக்கப்பட்டிருந்தை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் சிறுமியின் உடல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இதையடுத்து காவல்துறையினர் பாண்டி செல்வத்தை கைது செய்து விசாரணை நடத்தியதில் 2 தினங்களுக்கு முன் மனைவியுடன் செல்போனில் பேசியபோது வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அந்த சமயத்தில் பார்க்கவி அழுது கொண்டிருந்ததால் கோபத்தில் தள்ளி விட்டதாகவும், அப்போது தண்ணீர் தொட்டியில் விழுந்த பார்கவி உயிரிழந்ததால் யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்ததாகவும் தெவித்துள்ளார்.
மகளையே கொன்று பணி செய்யும் இடத்திலேயே சாக்கு மூட்டையில் கட்டி மறைத்து நாடகமாடிய தந்தைக்கு உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்று பொது மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
