தமிழக வெற்றி கழகத்தின் மீது நடவடிக்கை எடுக்க பாஜக நிர்வாகி முதல்வர் ஸ்டாலினுக்கு புகார் அனுப்பியுள்ளார்
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு நேற்று (ஆகஸ்ட் 21) மதுரை பாரப்பத்தியில் நடைபெற்றது. இதில் குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள் என சுமார் 3 லட்சம் பொதுமக்கள் கலந்துகொண்டதாக தகவல்கள் வருகின்றன.
ஆறு மாத குழந்தைகளை கூட விஜய் ரசிகர்கள் தூக்கி வந்திருந்தனர். கர்ப்பிணிகள், பள்ளி சிறார்கள் கூட கலந்துகொண்டனர். அதிலும், ‘ஒரு பெற்றோர், என் பிள்ளைகளுக்கு விடுமுறை இல்லை. அதனால் பள்ளிக்கு மூன்று நாள் விடுமுறை எடுத்து அழைத்து வந்திருக்கிறேன்’ என்று கூறினார்.

கர்ப்பிணி பெண் ஒருவர், தனது மற்றொரு குழந்தையை கையில் வைத்துக்கொண்டு, “நான் விஜய் அண்ணனை பார்த்தே ஆக வேண்டுமென வந்திருக்கிறேன்” என்று கண்கலங்கி பேசினார். மாநாட்டுக்கு சிறுவர்கள், வயதனாவர்கள், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள், கர்ப்பிணிகள் வர வேண்டாம் என்று விஜய் ஏற்கனவே அறிக்கை வெளியிட்டிருந்தபோதும் இவர்கள் வந்திருந்தார்கள்.
மாநாட்டில் வெயில் தாங்க முடியாமல் குழந்தைகள் கதறி அழுதனர். ஒரு ஆர்வத்தில் குழந்தைகளுடன் வந்துவிட்டாலும், பிள்ளைகள் அழுவதை பார்த்த பெற்றோர் கூட்டத்திலிருந்து வெளியேற முயன்றனர். ஆனால் அதிகளவிலான கூட்டத்தால் பலரால் அவ்வளவு எளிதில் வெளியேற முடியவில்லை. வெளியில் வருவதற்குள் சில குழந்தைகள் துவண்டுபோயின.
இதுபோன்ற நிகழ்வுகளை பார்த்த தவெகவினரும், தன்னார்வலர்களும் குழந்தைகளை வைத்திருந்தவர்களை நிழல்பகுதிக்கு அழைத்துச் சென்று மருத்துவ உதவிகளையும் வழங்கினர். எனினும் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இதை செய்ய முடியவில்லை.

இப்படிபட்ட நிலையில் தான் நேற்று தவெக மாநாடு நடந்து முடிந்திருக்கிறது.
நேற்று விஜய்க்காக கூடிய தவெக மாநாட்டு கூட்டத்தை பார்த்து அரசியல் கட்சியினர் கொஞ்சம் ஆடித்தான் போயிருக்கிறார்கள்.
இந்தநிலையில் பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏஎன்எஸ் பிரசாத் தமிழக முதல்வருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், “மாநாடுகளில் கை குழந்தைகள் மற்றும் சிறு குழந்தைகள் பாதுகாப்பற்ற சூழலுக்கு ஆளாகப்படுவது அதிகரித்து வருகிறது.
நேற்று மதுரையில் நடைபெற்ற தவெக மாநாட்டில் ஆறு மாதம் குழந்தை மற்றும் சிறுவர்களை தூக்கி வந்து கலந்துகொண்டுள்ளனர். அதனால் பிரிவு 21,39(e) 39(f) அரசியல் அமைப்பு விதிகள் மீறப்பட்டுள்ளன. சிறார் நீதி குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சட்டம் 2015 மற்றும் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாப்பு சட்டம் 2012 உள்ளிட்ட சட்டங்களை மீறப்பட்டுள்ளது.
எனவே தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், மாவட்ட ஆட்சியர், மதுரை காவல் ஆணையர், டிஜிபி இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசியல் கூட்டங்களுக்கு குழந்தைகள் அழைத்து வரப்படுவதைத் தடுக்க, மாநிலம் தழுவிய வழிகாட்டுதல்கள் அரசு வெளியிட வேண்டும்.
அரசியல் நிகழ்வுகளில் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இருப்பதைத் தடை செய்ய வேண்டும். இதுதொடர்பான அனுமதிக்கு விண்ணப்பிக்கும்போது அரசியல் கட்சிகள் உறுதிமொழிப் பத்திரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று விதிமுறைகளை வகுக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
