தமிழ்நாட்டில் குழந்தை தொழிலாளர்கள் இல்லாத நிலையை உருவாக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம் என்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் கூறியுள்ளார்.
உலக குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தினத்தையொட்டி சென்னை தியாகராய நகரில் உள்ள ஜீவா பூங்காவில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. 100க்கும் மேற்பட்ட பள்ளிக் குழந்தைகள் பங்கேற்ற பேரணியை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் இன்று (ஜூன் 12) தொடங்கி வைத்தார்.
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சி.வி.கணேசன் பேசுகையில், “இன்று குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு தொடர்ந்து வலியுறுத்தி வந்ததன் அடிப்படையில் முதலமைச்சர் ஆணைக்கிணங்க இன்று குழந்தை தொழிலாளர் முறையை எதிர்க்கும் தினம் கொண்டாடப்படுகிறது.

தொழிலாளர் நலத்துறை மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், குறிப்பாக தமிழ்நாட்டில் குழந்தை தொழிலாளர் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்பதற்காக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தை சிறப்பாக கொண்டாடி வருகிறோம்.
பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். குறிப்பாக குறும்படங்கள் காட்டுவது, தெருவிலே நாடகங்கள் நடத்துவது, சுவரொட்டிகள் என பல்வேறு வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.

சில இடங்களில் குழந்தை தொழிலாளர்கள் இருப்பதை சமூக அமைப்புகள் கண்டறிந்து சொன்னால் அதன் மீது நடவடிக்கை எடுப்போம். பெட்டிக்கடைகள், உணவகங்கள், வணிக நிறுவனங்கள் குழந்தை தொழிலாளர்கள் இருக்கிறார்கள் என்ற தகவல் கிடைத்தால் உடனடியாக அந்த நிறுவனங்களின் மீது உரிய நடவடிக்கை எடுப்போம்”. என்று கூறினார்.
மேலும், குழந்தை தொழிலாளர்கள் தொடர்பாக 1098 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டால் உடனடியாக துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் 2025 ஆம் ஆண்டுக்குள் குழந்தை தொழிலாளர்கள் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை மாற்ற வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தியுள்ளார் எனவும் கூறியுள்ளார்.
