கழிவு நீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலி : பள்ளித் தாளாளர் உட்பட 3 பேர் கைது!

Published On:

| By christopher

பள்ளி கழிவு நீர் தொட்டியில் LKG குழந்தை தவறி விழுந்து உயிரிழந்த வழக்கில் பள்ளி தாளாளர் உட்பட 3 பேர் இன்று (ஜனவரி 4) கைது செய்யப்பட்டுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி மேற்கு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பழனிவேல் – சிவசங்கரி தம்பதியர். இவர்களின் ஒரே மகளான லக்‌ஷ்மி (5 வயது) அங்குள்ள செயின்ட் மேரீஸ் தனியார் மேல்நிலைப் பள்ளியில் எல்.கே.ஜி படித்து வந்தார்.

ADVERTISEMENT

நேற்று பள்ளி உணவு இடைவேளைக்கு பிறகு மீண்டும் வகுப்பறை தொடங்கியபோது, அங்கு லக்‌ஷ்மி இல்லாததைக் கண்டு ஆசிரியர் ஏஞ்சல் தேடியுள்ளார்.

நீண்ட தேடலுக்கு பிறகு குழந்தைகள் விளையாடிய இடத்திற்கு அருகே இருந்த கழிவுநீர் தொட்டி மூடி உடைந்திருப்பதை கண்டு, அங்கு சென்று பார்த்தபோது, கழிவுநீர் தொட்டிக்குள் குழந்தை விழுந்து கிடந்தது தெரியவந்தது.

ADVERTISEMENT

உடனடியாக சிறுமியை மீட்ட பள்ளி நிர்வாகத்தினர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதை உறுதி செய்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த பெற்றோர் பதறியடித்து வந்த அழுத காட்சி காண்போரை கண்கலங்கச் செய்தது. பள்ளி நிர்வாகத்தின் கவனக் குறைவால் தான் சிறுமி உயிரிழந்ததாக குற்றம்சாட்டியுள்ள சிறுமியின் உறவினர்கள், பள்ளி நிர்வாகத்தை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சிறுமியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், பள்ளி நிர்வாகம் உண்மையைத் தெரிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

ADVERTISEMENT

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள விக்கிரவாண்டி போலீசார், தனியார் பள்ளியின் தாளாளர் எமில்டா, பள்ளி முதல்வர் டொமில்லா மேரி, வகுப்பு ஆசிரியர் ஏஞ்சல் ஆகியோரை நள்ளிரவில் கைது செய்தனர். அவர்கள் விழுப்புரம் மகளிர் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.

சிறுமியின் மரணத்தில் பல்வேறு சந்தேகம் நிலவும் நிலையில், பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு இடையே முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிறுமியின் உடல் இன்று காலை பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது.

இதற்கிடையே குழந்தையின் உறவினர்கள் போராட்டத்தை தொடர்ந்து வரும் நிலையில், விக்கிரவாண்டி பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

இளைஞர்களுக்கு எந்தமாதிரி ஊக்கம் தேவை?

டாப் 10 நியூஸ் : தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு முதல் டெல்லி விவசாயிகள் போராட்டம் வரை!

கிச்சன் கீர்த்தனா : சுசியன்

டிஜிட்டல் திண்ணை: வர்றீங்களா? வீட்டை சீல் வைக்கட்டுமா…  மிரட்டிய E.D-அதிர்ந்த துரைமுருகன்… புத்தாண்டின் முதல் வேட்டை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share