நீதித்துறை அதிகாரிகளுக்கான ஓய்வூதிய நிலுவை தொகை மற்றும் ஓய்வூதிய பலன்களை அளிப்பது தொடர்பான வழக்கில் தமிழ்நாடு அரசு தலைமை செயலாளர் முருகானந்தம் இன்று (ஆகஸ்ட் 27) நேரில் ஆஜராகி விளக்கம் அளித்ததை அடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.
மாவட்ட நீதிபதிகள், நீதித்துறை அதிகாரிகளுக்கான ஊதியம், ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் மற்றும் கொடுப்பனைவுகளுக்கான பரிந்துரைகளை எஸ்.என்.ஜே.பி.சி., எனப்படும் இரண்டாவது தேசிய நீதித்துறை ஊதிய கமிஷன் வழங்கி வருகிறது.
இந்த கமிஷன் அளித்த பரிந்துரைகளை தமிழ்நாடு, மத்திய பிரதேசம், ஆந்திரா, மேற்கு வங்கம், சத்தீஸ்கர், டெல்லி, அசாம் உட்பட 18 மாநிலங்கள் முழுமையாக நிறைவேற்றவில்லை என புகார் எழுந்தது.
மேலும் எஸ்.என்.ஜே.பி.சி அளித்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த உத்தரவிடும்படி, அனைத்திந்திய நீதிபதிகள் சங்கம் உட்பட 22 பேர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை கடந்த 23ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், தமிழகம் உட்பட பட்டியலில் உள்ள 18 மாநிலங்களின் தலைமை செயலாளர்களும் ஆகஸ்ட் 27ஆம் தேதி (இன்று) நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டார்.
அதன்படி இன்று நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது தமிழ்நாடு அரசு சார்பில் புதிய தலைமை செயலாளர் முருகானந்தம், நிதித்துறை செயலாளர் உதயச்சந்திரன் ஆகியோர் ஆஜராகினர்.
அப்போது மாவட்ட நீதிபதிகளுக்கு உயர்த்தப்பட்ட ஊதியத்தை அளிக்கும் உத்தரவை அமல்படுத்தும் விவகாரத்தில், எஸ்.என்.ஜே.பி.சி பரிந்துரைத்த நிதி ஒதுக்கப்பட்டுவிட்டதாகவும், அதை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாகவும் தலைமைச் செயலாளர் தெரிவித்தார்.
இதனை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி சந்திரசூட், “4 வாரங்களுக்குள் உரிய பணப்பலன்களை வழங்கும் பணிகளை நடைமுறைப்படுத்த வேண்டும். நிதியை ஒதுக்கிவிட்டதால் தமிழ்நாட்டின் மீதான நடவடிக்கை கைவிடப்படுகிறது. வழக்கும் முடித்துவைக்கப்படுகிறது” என்று உத்தரவிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
ஜூனியர் ஆர்டிஸ்ட் அம்மாவை கூட விட்டு வைக்கல : நடிகை சரிதாவின் முன்னாள் கணவர் மீது புகார்!
எடப்பாடி நேரில் ஆஜர் : தயாநிதிமாறன் தொடர்ந்த வழக்கு ஒத்திவைப்பு!