தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு செல்லவிருந்த இரண்டு நாள் பயணத் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் எம். எல். ஏ. மதியழகன் குடும்ப திருமண வரவேற்பு நிகழ்ச்சி நவம்பர் 22 ஆம் தேதி மாலையில் நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் ஏற்கனவே தேதி கொடுத்திருந்தார்.
இந்த நிகழ்ச்சியோடு மறுநாள் நவம்பர் 23 ஆம் தேதி காலையில் முன்னாள் எம். எல். ஏ. முருகன் குடும்ப திருமண நிகழ்ச்சி மற்றும் கிருஷ்ணகிரி நகரமன்ற தலைவர் பரீதா நவாப் குடும்ப திருமண நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ள இரண்டு பயணத் திட்டமாக திட்டமிட்டிருந்தார் ஸ்டாலின்.
இதற்கிடையே தர்மபுரி மாவட்டம் அரூரில் சுமார் 50 லட்சம் மதிப்பில் வெண்கலத்தால் ஆன தீரன் சின்னமலை சிலையை உருவாக்கியுள்ள கொங்கு சமுதாய சங்கத்தினர் , இந்த சிலையை முதல்வர் ஸ்டாலின்தான் திறந்து வைக்க வேண்டும் என்றும் முயற்சித்து வந்தனர். ஸ்டாலின் கிருஷ்ணகிரி வரும்போது அப்படியே தர்மபுரிக்கு வந்தால் இந்த சிலை திறப்பு நிகழ்ச்சியையும் நடத்துவதற்கும் அவர்கள் தயாராக இருந்தனர்.
இந்த நிலையில்தான், சமீபத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட முதலமைச்சர் ஸ்டாலின் இன்னமும் முழுமையாக குணம் அடையாத நிலையில், அவரது கிருஷ்ணகிரி இரு நாள் பயணத் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஸ்டாலின் பங்கேற்கவிருந்த திருமண நிகழ்ச்சிகளில் இளைஞர் அணி செயலாளரும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி பங்கேற்கக் கூடும் என்று சொல்கிறார்கள் திமுக மாவட்ட நிர்வாகிகள்.
இதுகுறித்து திமுக தலைமைக்கு நெருக்கமானவர்களிடம் விசாரித்தபோது,
“நேற்று சட்டமன்ற சிறப்புக் கூட்டம் கூடிய நிலையில் சட்டமன்றத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் களைப்போடுதான் காணப்பட்டார். அவர் காய்ச்சலில் இருந்தும் தொண்டை வலியில் இருந்தும் இன்னமும் முழுமையாக விடுபடவில்லை. தனது உரையில் கூட இதுபற்றி அவர் குறிப்பிட்டார். சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவருக்கு பதில் அளிக்கும்போது கூட மிகப் பொறுமையாக எழுந்து பதிலளித்துவிட்டு மிகப் பொறுமையாகவே அமர்ந்தார்.
முதலமைச்சருக்கு தொண்டை வலி இருப்பதால் அதிகமாக பேசக்கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் நீண்ட தூர பயணங்களையும் ரத்து செய்யுமாறு மருத்துவர்கள் முதலமைச்சரிடம் தனிப்பட்ட முறையில் வற்புறுத்தியுள்ளனர். அதனால் கிருஷ்ணகிரி பயணம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது” என்கிறார்கள் முதலமைச்சருக்கு நெருக்கமான திமுக மூத்த நிர்வாகிகள்.
–வணங்காமுடி
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
world cup final 2023: இந்திய அணிக்கு தலைவர்கள் வாழ்த்து!
மகளிர் உரிமை தொகை பயனாளிகளை சேரவில்லை: எடப்பாடி குற்றச்சாட்டு!