முதல்வரின் தென்காசி பயணம் : இது ரயிலா? நகரும் வீடா?

Published On:

| By Kavi

தமிழக முதல்வர் ஸ்டாலின் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் தென்காசிக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் பயணம் மேற்கொண்டிருக்கும் ரயில் பெட்டி கவனத்தைப் பெற்றுள்ளது.

தமிழக முதல்வர் ஸ்டாலின் முதல்வரான பிறகு முதன் முறையாகத் தென்காசி மாவட்டத்திற்குச் செல்கிறார். குறிப்பாக, அவர் முதல்வரான பிறகு முதன்முறையாக ரயிலில் பயணம் மேற்கொள்கிறார்.

ADVERTISEMENT
Chief Minister's Tenkasi visit

வழக்கமாக பல்வேறு மாவட்டங்களுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது விமானம் மூலம் செல்லும் முதல்வர் ஸ்டாலின், இம்முறை ரயிலில் பயணித்திருப்பது கவனத்தைப் பெற்றுள்ளது

நேற்று (டிசம்பர் 7) இரவு 8.05 மணிக்கு தனது வீட்டிலிருந்து எழும்பூர் ரயில் நிலையத்துக்கு முதல்வர் ஸ்டாலின் காரில் புறப்பட்டார். எழும்பூர் ரயில் நிலையம் வந்தடைந்த முதல்வருக்கு ரயில் நிலையத்தில் கட்சி கொடியுடன் திரண்டிருந்த திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ADVERTISEMENT

அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் மற்றும் கட்சி நிர்வாகிகள் திரளானோர் கூடி முதல்வரை ரயிலில் தென்காசிக்கு வழி அனுப்பி வைத்தனர்.

முதல்வருடன் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி உள்ளிட்டோரும் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

ADVERTISEMENT
Chief Minister's Tenkasi visit

ரயில் புறப்பட்டு தாம்பரம் வந்தடைந்ததும் அங்கு எம்.எல்.ஏ., எஸ்.ஆர்.ராஜா தலைமையில் திமுக நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். முதல்வரை வரவேற்க நடைமேடையில் குவிந்திருந்த திமுக தொண்டர்கள் அனைவரும் பிளாட்பார்ம் டிக்கெட் எடுத்து அதை சரளமாகக் கோர்த்து மாலையாக போட்டுக்கொண்டு ஆரவாரம் செய்தனர்.

சலூன் கோச்

இவ்வாறு உற்சாக வரவேற்புக்கு மத்தியில் முதல்வர் செல்லும் அந்த ரயில் பெட்டி மக்களின் கவனத்தைப் பெற்றுள்ளது.

முதல்வர் செல்லும் இந்த ரயில் பெட்டி சலூன் கோச் அல்லது நகரும் வீடு என்று அழைக்கப்படுகிறது.

இந்தப் பெட்டியில் அட்டாச் பாத்ரூம் உடன் இரண்டு பிரத்யேக படுக்கை அறைகள், பெரிய ஹால், சோபா – பெட், ஏசி, ஃபேன், பெரிய டிவி, ஒரு பெரிய உணவருந்தும் அறை, சமையலறை ஆகியவை இருக்கும்.

இந்த சமையலறையில் தேவையான பாத்திரங்கள், குளிர்சாதன பெட்டி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீருக்கான இயந்திரம் உள்ளிட்டவையும் பொருத்தப்பட்டிருக்கும். சொல்லப்போனால் ஒரு சொகுசு வீடு போலவே இப்பெட்டி இருக்கும்.

அதிலும் இந்தப் பெட்டி, ரயிலின் கடைசி பெட்டியாகத் தான் இணைக்கப்படும். காரணம் பின்புறம் உள்ள கண்ணாடி ஜன்னல் வழியாக இயற்கை அழகை ரசித்துக் கொண்டே பயணிக்கலாம்.

இதுபோன்ற சலூன் பெட்டிகள் இந்திய ரயில்வேயிடம் 336 உள்ளன. இந்த ரயில் பெட்டியில் குடியரசு தலைவர்கள், துணை குடியரசு தலைவர்கள், ஆளுநர்கள் முதலமைச்சர்கள் உள்ளிட்டோர் பயணிப்பார்கள்.

இதில் பொதுமக்கள் பயணம் செய்ய வேண்டும் என்றால் 2 லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.

முதன் முதலில் இது போன்ற சலூன் பெட்டிகள் டெல்லி ரயில் நிலையத்திலிருந்து ஜம்மு, காஷ்மீரின் கத்ரா வரையிலான ரயில்களில் அறிமுகப்படுத்தப்பட்டன.

Chief Minister's Tenkasi visit

முதல்வரின் நிகழ்ச்சி!

இன்று காலை 7.30 மணிக்கு தென்காசி வந்தடைந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்-க்கு திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஏராளமான திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் வரவேற்பை பெற்ற முதலமைச்சர் குற்றாலத்தில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் சிறிது நேரம் ஓய்வெடுக்கவுள்ளார்.

இதனைத் தொடர்ந்து இலத்தூர் வேல்ஸ் வித்யாலயா பள்ளி மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், சுமார் ஒரு லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

பிரியா

ஆளுநரைச் சந்தித்த ஆன்லைன் கேம் நிறுவன நிர்வாகிகள்!

56 எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீது சிபிஐ வழக்கு: தமிழகத்தில் எத்தனை?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share