ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு அரசு பணி – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

Published On:

| By Pandeeswari Gurusamy

பாரம்பரியம் மிக்க ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்று அதிக காளைகளை அடக்கி சிறந்து விளங்கும் வீரர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கால்நடை பராமரிப்புத் துறையில் உரிய அரசு பணியிடங்களுக்கு பணியமர்த்த வழிவகை செய்யப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பொங்கல் பண்டிகையையொட்டி ஆண்டுதோறும் தமிழரின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் மதுரை மாவட்டத்தின் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், நேற்று முன்தினம் அவனியாபுரத்திலும், நேற்று பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றன. இந்நிலையில், இன்று (ஜனவரி 17) காலை முதல் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது.

ADVERTISEMENT

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியைக் காண இன்று காலை 11.10 மணியளவில் விழா மேடை திடலுக்கு வருகை தந்த தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு அமைச்சர் பி. மூர்த்தி பொன்னாடை அணிவித்து வரவேற்றார். ஆட்சியர் பிரவீன் குமார் காளை மாட்டு வண்டியை பரிசாக வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், சோழவந்தான் சட்டப்பேரவை உறுப்பினர் வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், “உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு பார்க்கும்போது நமக்கெல்லாம் வீரம் வருகிறது. மாடுகளை அடக்கும் காளையர்களைப் பார்க்கும்போது நமது தமிழ் மண்ணிற்கு பெருமையாக உள்ளது.திராவிட மாடல் ஆட்சியில் வீரம் விளைந்த மதுரை மண்ணில், சங்கம் வளர்த்த மாமதுரையில் அறிவு வளர்ச்சிக்காக கலைஞர் நூற்றாண்டு நூலகம் கட்டிக் கொடுத்துள்ளோம். அதேபோல், தமிழர்களின் அடையாளமாக விளங்கும் இந்த வீர விளையாட்டுக்கு கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கமும் கட்டிக் கொடுத்துள்ளோம்.

இரண்டு அறிவிப்புகள்:

பாரம்பரியம் மிக்க ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்று அதிக காளைகளை அடக்கி சிறந்து விளங்கும் வீரர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கால்நடை பராமரிப்புத் துறையில் உரிய அரசு பணியிடங்களுக்கு பணியமர்த்த வழிவகை செய்யப்படும்.

ADVERTISEMENT

உலகப் புகழ்பெற்ற தமிழ்நாட்டின் ஜல்லிக்கட்டு காளைகளுக்காக அலங்காநல்லூரில் சிறந்த உயர்தர சிகிச்சை மற்றும் பயிற்சி மையம் 2 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share