பகுதி நேர ஆசிரியர்களுக்கு முதல்வரின் முக்கிய அறிவிப்பு

Published On:

| By Pandeeswari Gurusamy

பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் மூலம் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த 20-ம் தேதி இந்த ஆண்டுக்கான முதல் சட்டமன்றக் கூட்டத் தொடர் தொடங்கியது. சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலுரையில் பகுதிநேர ஆசிரியர்களுக்கான புதிய அறிவிப்பை வெளியிட்டுப் பேசினார்.

ADVERTISEMENT

அப்போது அவர், “பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு, அவர்கள் கோரிய விடுமுறைக் கால மே மாத ஊதியம் ஆகியவை ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளன. அவர்களின் அடுத்த கோரிக்கையான நிரந்தரப் பணி நியமனத்தைப் பொறுத்தவரை ஓர் அறிவிப்பை நான் வெளியிடுகிறேன்.அரசுப் பள்ளிகளில் காலிப்பணியிடங்களை நிரப்பும்போது பகுதிநேர ஆசிரியர்கள் நிரந்தர ஆசிரியர்களாக நியமனம் செய்யப்படுவதற்கு ஏதுவாக, இதற்கான தேர்வுகளில் அவர்களின் பணிக் காலத்தை அடிப்படையாகக் கொண்டு சிறப்பு மதிப்பெண் வழங்கப்படும். அதனடிப்படையில் அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்.

இதற்கான ஆணைகள் விரைவில் வெளியிடப்படும்” என்று தெரிவித்தார்.சம வேலைக்கு சம ஊதியம், பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக, பகுதிநேர ஆசிரியர்களுக்கு மாத ஊதியம் ரூ.12,500-லிருந்து ரூ.15,000 ஆக உயர்த்தப்படும் எனவும், கடந்த 13 ஆண்டுகளாக மே மாதம் ஊதியம் வழங்கப்படாத நிலையில் இனி மே மாதத்தில் ரூ.10,000 வழங்கப்படும் எனவும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share