ADVERTISEMENT

பீகார் தேர்தல் : முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி – இந்தியா கூட்டணி அறிவிப்பு!

Published On:

| By Kavi

ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான இந்தியா கூட்டணி (மஹாகத்பந்தன்) முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

பீகாரில் வரும் நவம்பர் மாதம் இரண்டு கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் என்.டி.ஏ கூட்டணி, இந்தியா கூட்டணிக்கு இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.

ADVERTISEMENT

என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிந்து அதன் கட்சித் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேசமயம் இந்தியா கூட்டணிக்குள் மோதல் போக்கு அதிகரித்துள்ளது. அதாவது இந்த கூட்டணியில் உள்ள கட்சிகள் ஒருவரை ஒருவர் எதிர்த்து போட்டியிடுகின்றனர். இந்தியா கூட்டணியில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் முக்கிய கட்சியாக இருக்கிறது.

ADVERTISEMENT

ஆனால் இக்கட்சி வேட்பாளர்கள் 4 தொகு​தி​களில் காங்​கிரஸை எதிர்த்து போட்​டி​யிடுகின்றனர். அதே​போல் விஐபி (வி​காஸ்​ஷீல் இன்​சான்) கட்​சியை எதிர்த்து 3 தொகு​தி​களில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் வேட்பு மனு தாக்​கல் செய்​துள்​ளது. அதே​போல் சிபிஐ கட்​சியை எதிர்த்து 4 தொகு​தி​களில் காங்​கிரஸ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளது.
 

இன்று வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால் இதில் எதாவது மாற்றம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

இந்த்சூழலில் இன்று (அக்டோபர் 23) பாட்னாவில் இந்தியா கூட்டணியின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

இதில் தேஜஸ்வி யாதவ், காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் கெலாட், இந்தியா கூட்டணியில் புதிதாக இணைந்துள்ள விஐபி கட்சியின் தலைவர் முகேஷ் சஹானி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய அசோக் கெலாட், ’இந்த தேர்தலில் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவை அறிவிக்கிறோம். எதிர்க்கட்சிகள் இணைந்து இந்த முடிவை எடுத்துள்ளோம். துணை முதல்வர் வேட்பாளராக  விஐபி கட்சியைச் சேர்ந்த முகேஷ் சஹானி  அறிவிக்கப்படுகிறார்’ என்றார்.

இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும்போது மேலும் ஒரு பிற்படுத்தப்பட்ட சமூகத் தலைவருக்குத் துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படும் என்றும் கெலாட் அறிவித்தார். 

இதையடுத்து இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு நன்றி தெரிவித்து பேசிய தேஜஸ்வி யாதவ், “உங்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன். தற்போது ஆட்சியில் உள்ள 20 ஆண்டுகால அரசாங்கத்தை நாங்கள் அனைவரும் இணைந்து தூக்கியெறிவோம்” என்று கூறினார்.

ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA), முதலமைச்சர் நிதீஷ் குமார் தலைமையில் தேர்தலைச் சந்திக்கும் என்று அக்டோபர் 16 அன்று பாஜக மூத்த தலைவர் அமித் ஷா அறிவித்தார். தேர்தலுக்குப் பிறகு சட்டமன்றக் கட்சித் தலைவர்களால் முதல்வர் முடிவு செய்யப்படுவார் என்றும் தெரிவித்திருந்தார். இந்தசூழலில் இந்தியா கூட்டணி முதல்வர் வேட்பாளரை அறிவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share