தமிழக அரசுடன் சாம்சங் ஊழியர்கள் சார்பில் நேற்று (அக்டோபர் 14) நடத்திய பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படாததால், இன்றும் போராட்டம் தொடரும் என்று சிஐடியு தலைவர் சௌந்தரராஜன் அறிவித்துள்ளார். இந்நிலையில் இந்த விவகாரத்தில் பொதுப்பணித்துறை அமைச்சரும், கூட்டணிக் கட்சிகளுடனான விவகாரங்களை கையாள்பவருமான அமைச்சர் எ.வ.வேலுவை களமிறக்கியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
தொழிற்சங்கம் தொடங்க அனுமதிக்கக் கோரி கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகக் காஞ்சிபுரம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள சாம்சங் நிறுவனத்தின் 1500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது தொடர்பாக அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா, தா.மோ. அன்பரசன், சி.வி.கணேசன் ஆகியோர் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனர். ஆனால் உடன்பாடு ஏற்படவில்லை.
இந்தச் சூழலில் நேற்று(அக்டோபர் 14) சென்னை தலைமைச் செயலகத்தில்,தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி.வி கணேசன் ஆகியோர் சிஐடியு தலைவர் சௌந்தர ராஜன், சிஐடியு சாம்சங் இந்தியா தொழிலாளர்கள் சங்கத் தலைவர் முத்துக்குமார் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தை மாலை 6 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை நீடித்தது.
இந்த பேச்சுவார்த்தையில் குறிப்பிடத் தக்க அம்சம் என்னவெனில் வழக்கமான துறை சார்ந்த அமைச்சர்கள், அந்த மாவட்ட அமைச்சர் தா.மோ. அன்பரசனைத் தாண்டி இம்முறை பேச்சுவார்த்தையில் அமைச்சர் எ.வ.வேலுவையும் பங்கேற்கச் சொல்லியிருக்கிறார் முதல்வர். ஏற்கனவே கூட்டணி கட்சிகளின் விவகாரங்களை எல்லாம் கவனித்து வருபவர் அமைச்சர் எ.வ.வேலுதான். சமீபத்தில் விசிகவுக்கும் திமுகவுக்குமான விவகாரத்தின் போது கூட திருமாவளவனோடு எ.வ.வேலுதான் பேசினார்.
இந்த நிலையில்தான்… சாம்சங் விவகாரத்தை அரசு-தொழிற்சங்கம் என்ற பார்வையைத் தாண்டி கூட்டணிக் கட்சிகளின் பிரச்சினையாகவும் பார்த்து அவர்களோடு பேசுமாறு வேலுவுக்கு அறிவுறுத்தியுள்ளார் முதல்வர் ஸ்டாலின். அதன்படியே நேற்றைய பேச்சுவார்த்தையில் துறை ரீதியாக தொடர்புடைய அமைச்சர்களைத் தாண்டி அமைச்சர் எ.வ.வேலுவும் இடம்பெற்றார். அவர் சிஐடியு சௌந்தராஜனோடு மனம் திறந்து, அன்பாக சில விஷயங்களைப் பேசியிருக்கிறார்.
தொழிற்சங்கத்துக்கான பதிவு, தொழிற்சங்கத்தின் பெயர் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக வேலு சில விஷயங்களை சௌந்தராஜனிடம் எடுத்துச் சொல்லியிருக்கிறார். அதாவது தொழிற்சங்கத்தின் பதிவு பற்றி பிரச்சினை இல்லை., அதில் சாம்சங் என்ற பெயர் இடம்பெற வேண்டுமா என்று அரசுத் தரப்பில் கேட்கப்பட்டிருக்கிறது. அதற்கு சிஐடியு சார்பில், ‘அந்த ஆலையில் பணியாற்றும் தொழிலாளர்களின் சங்கத்துக்கு வேறு என்ன பெயர் வைப்பது? சாம்சங் என்றுதான் பெயர் வைக்க முடியும்’ என்று பதிலளிக்கப்பட்டிருக்கிறது.
சுமார் நான்கு மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு, நேற்று இரவு பத்திரிகையாளர்களைச் சந்தித்த சிஐடியு தலைவர் சௌந்தரராஜன், “இன்று நடந்த பேச்சுவார்த்தை முற்று பெறவில்லை. நாளையும் (அக்டோபர் 15) பேச்சுவார்த்தை தொடரலாம். மேலும் ஊழியர்களின் போராட்டம் தொடரும்” என்றார்.
இதற்கு முன்பு, சாம்சங் தொழிற்சங்கத்தைப் பதிவு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவு இடக்கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் சி.ஐ.டி.யு சார்பாக வழக்கு தொடரப்பட்டது. கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் தமிழக அரசு, தொழிற்சங்கங்கள் பதிவாளர், தொழிலாளர் நலத்துறை துணை ஆணையர் பதிலளிக்கும்படி வழக்கை விசாரித்த நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த நிலையில் நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா முன்பாக நேற்று சிஐடியு தொழிற்சங்கத்தின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் சிவக்குமார், இந்த வழக்கை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டுமென முறையிட்டார். அதையடுத்து நீதிபதி, இந்த வழக்கை நாளை (அக்டோபர் 16) விசாரிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிற திமுக கூட்டணித் தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன், முத்தரசன், திருமாவளவன் உள்ளிட்டோர் முதல்வரை இந்த விவகாரம் தொடர்பாக சந்திக்க நேரம் கேட்டிருந்தார்கள். இந்நிலையில், கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் தொடர்ந்து பேசிவரும் அமைச்சர் எ.வ.வேலு இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்றிருப்பது தீர்வுக்கான திசையை நோக்கி செல்கிறது என்கிறார்கள் திமுக கூட்டணி வட்டாரங்களில்,
-வேந்தன், அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
கனமழை முடியும் வரை ஆன்லைன் வகுப்புக்கு தடை : அன்பில் மகேஸ் உத்தரவு!
கனமழையால் பாதிப்பு : உதவிக்கரம் நீட்டிய தேமுதிக… பிரேமலதா முக்கிய அறிவிப்பு!
வலுப்பெற்றது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: மேலும் சில மாவட்டங்களில் விடுமுறை அறிவிப்பு!