முதல்வர் ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக இன்று (டிசம்பர் 20) திருநெல்வேலி வந்தடைந்தார். அவருக்கு பொறுப்பு மாவட்ட அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ரெட்டியார்பட்டி மலைப்பகுதியில் 62 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள பொருநை அருங்காட்சியகத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கவுள்ளார். இதைத்தொடர்ந்து இன்றும் நாளையும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவுள்ளார்.
குறிப்பாக மாலை கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்கிறார்.
இதையொட்டி சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்த முதல்வர் ஸ்டாலினை சபாநாயகர் அப்பாவு, திமுக துணைபொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம்தென்னரசு, கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், மனோதங்கராஜ் ஆகியோர் வரவேற்பு அளித்தனர்.
பின்னர் அங்கிருந்து கார் மூலம் நெல்லை வந்தார். வண்ணார்பேட்டை முதல் டக்கரம்மாள்புரம் வரை சுமார் 7 கிலோமீட்டர் தூரத்துக்கு திமுக கொடிகளும், வரவேற்பு பேனர்களும் பிரம்மாண்டமாக கட்டப்பட்டிருந்தன.

மாவட்ட எல்லையான பாளை கே.டி.சி. நகருக்கு முதல்வர் வந்ததும் மாவட்ட பொறுப்பு அமைச்சரான கே.என்.நேரு தலைமையில் திமுகவினர் ஆயிரக்கணக்கில் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அங்கிருந்து நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகை வந்தார் முதல்வர் ஸ்டாலின். பின்னர், மாலை 4 மணியளவில் புறப்பட்டு வண்ணார்பேட்டை தெற்கு புறவழிச்சாலை வழியாக டக்கரம்மாள்புரம் வந்து, அங்கு கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்கிறார்.

இதைத்தொடர்ந்து பொருநை அருங்காட்சியகம் திறப்பு, 32 நிறைவுற்ற பணிகளை தொடங்கி வைத்தல், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல் என பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
இன்றும் நாளையும் நெல்லையில் இருக்கும் முதல்வர் ஸ்டாலின், நாளை மாலை காணொளி காட்சி வாயிலாக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை நடத்துகிறார்.
