ADVERTISEMENT

ஆளுநரின் செயல் மக்களாட்சிக்கு விடப்பட்ட சவால் – முதல்வர் ஸ்டாலின் காட்டம்

Published On:

| By Pandeeswari Gurusamy

ஆளுநரின் செயல் மக்களாட்சிக்கு விடப்பட்ட சவால் – முதல்வர் ஸ்டாலின் பேரவையில் காட்டம்

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல் மக்களாட்சிக்கு விடப்பட்ட சவால் என இன்று (ஜனவரி 24) தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

தமிழக சட்டப்பேரவை கடந்த 20ஆம் தேதி தொடங்கியது. தமிழ்த்தாய் வாழ்த்துக்குப் பிறகு தேசிய கீதம் பாடப்படவில்லை என்று குற்றம் சாட்டி, தனது உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என். ரவி வெளியேறினார். அதன்பிறகு, ஆளுநரின் தமிழ் உரையை சபாநாயகர் மு. அப்பாவு வாசித்தார். இது அவைக்குறிப்பில் ஏற்கப்பட்டது.

இந்நிலையில், இன்று பேரவையில் முதல்வர் ஸ்டாலின் பதிலுரை அளித்து பேசினார். ஆளுநரின் செயல்பாடு குறித்து பேசிய முதல்வர்,”தமிழ்நாட்டின் நலனுக்காக செயல்பட வேண்டிய ஆளுநர், தமிழ்நாட்டிற்கும் மக்களுக்காகப் பாடுபடும் எங்களுக்கும் எதிராகத் தொடர்ந்து செயல்படுவது தான் எங்களுக்கு மிகுந்த வேதனையை அளிக்கிறது. ஆளுநர் தாம் படிக்க வேண்டிய உரையைப் படிக்காமல் செல்வது வேடிக்கையாக உள்ளது. இன்னும் சொல்ல வேண்டுமானால், அவர் வகிக்கும் பதவியையே அவர் அவமானப்படுத்துகிறார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள ஒரு பொறுப்புமிக்க பதவியில் இருந்து கொண்டு அதை கேவலப்படுத்தும் செயலாக உள்ளது.

ADVERTISEMENT

கடந்த மூன்றாண்டுகளாக நமது ஆளுநர் ஒரே காரணத்தைத் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தயாரித்துக் கொடுத்த உரையைப் படிக்காமல் வெளியேறுவது என்பது மக்களாட்சிக்கு விடப்பட்ட சவாலாகவே இந்த பேரவை கருத வேண்டி உள்ளது.

கோடிக்கணக்கான மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இது. கோடிக்கணக்கான மக்களுடைய விருப்பங்களுக்கு ஏற்ற வகையில் செயல்படக்கூடிய அரசு இது. ஆளுநர் உரை தொடங்கும்போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதும், முடிவடையும்போது நாட்டுப்பண் பாடுவதும் தமிழ்நாடு சட்டமன்றத்தின் மரபு.

முதலிலேயே நாட்டுப்பண் பாடவில்லை என்பதைத் திரும்பத் திரும்பக் குற்றச்சாட்டாக அவர் கூறி வருகிறார். இந்த நாட்டின் மீதும், நாட்டுப்பண் மீதும் அளவற்ற பெருமதிப்பையும் மரியாதையும் கொண்டுள்ளவர்கள் நாம். தேசிய ஒருமைப்பாட்டிலும் நாட்டுப் பற்றிலும் யாருக்கும் குறைந்தவர்கள் அல்ல நாங்கள் என்பதை இந்தப் பேரவை உறுப்பினர்கள் சார்பாக ஆளுநருக்கு அழுத்தமாகவும் திருத்தமாகவும் நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

ADVERTISEMENT

யாரும் எங்களுக்கு தேசபக்தி குறித்து பாடம் எடுக்கும் நிலையில் இல்லை. தேசபக்தி பாடம் நடத்தக்கூடிய அளவிற்கு இந்தத் தேசத்திற்காகப் போராடியவர்களும் அவர்கள் இல்லை. ஜனநாயகத் தேசத்தில் அரசியலமைப்பு மாண்பை அதிகாரத் தன்மையோடு மாற்ற நினைப்பவர்கள் தான் இன்றைய காலகட்டத்தில் தேச விரோதிகள். அவர்கள் யார் என்பது நாட்டு மக்களுக்கு நன்றாகத் தெரியும்.

எம்ஜிஆர், ஜெயலலிதா கூட எதிர் கொள்ளாத நெருக்கடி

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்குப் பதிலளிக்க வேண்டிய நான், இன்று ஆளுநருக்கு விளக்கம் அளித்துப் பேச வேண்டிய நிலையில் இருக்கிறேன். இது பேரறிஞர் பெருந்தகை அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், மக்கள் திலகம் எம்ஜிஆர், அம்மையார் ஜெயலலிதா ஆகியோரும் எதிர்கொள்ளாத நெருக்கடி.

அவர்கள் காலத்தில் இருந்த ஆளுநர்கள் கூட இப்படி செயல்படவில்லை. பல முரண்பாடுகள் இதயத்தில் இருந்தாலும், அதை ரணமாக்கும் வகையில் செயல்படவில்லை. அந்த அளவுக்கு அதிகமான சோதனைகளை எதிர்கொண்டவனாக நான் இன்று நின்று கொண்டிருக்கிறேன். என்னைப் பொறுத்தவரை சோதனைகள் எனக்குப் புதிதல்ல. சோதனைகளை வென்று வளர்ந்தவன் நான். என்னைச் சீண்டிப் பார்ப்பவர்கள் மனதிற்குள் மகிழ்ச்சி அடையலாம்; தவிர, அது என்னை எதுவும் செய்ய முடியாது.” என்று தெரிவித்தார்.

தமிழக முதல்வரின் பிரதான உரையை அதிமுக புறக்கணித்தது. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக உறுப்பினர்கள் யாரும் இன்று அவை நிகழ்வுகளில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share