முத்தமிழ் பேரவை இசை விழாவில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் பெயரில் ஒரு விருது வழங்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை வைத்தார்.
முத்தமிழ்ப் பேரவையின் 42வது ஆண்டு இசை விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின் விருதுகளை வழங்கினார்.
இயல் செல்வம் விருது எஸ். ராஜாவுக்கும், இசை செல்வம் விருது எஸ்.மகதிக்கும் வழங்கப்பட்டது. ராஜ ரத்னா விருது கணேசனுக்கும், நாட்டிய செல்வம் விருது எஸ்.பழனியப்பனுக்கும், வீணை செல்வம் விருது ராஜேஷ் வைத்யாவுக்கும், தவில் செல்வம் விருது கண்ணனுக்கும் வழங்கப்பட்டது.
விருது வழங்கிய பின்னர் முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, “முத்தமிழ் பேரவையில் விருது பெறாத தலைசிறந்த கலைஞர்களே இல்லை என்கின்ற அளவிற்கு அவர்களை கண்டறிந்து விருதுகளை வழங்கிக் கொண்டிருக்கிறது. முத்தமிழ் பேரவையின் விருதை பெற்றோம் என்று சொல்வதே பெருமைக்குரியதாக அமைந்துவிட்டது.
அந்த வகையில் 42வது முத்தமிழ் பேரவையில் விருது பெற்ற ராஜாவின் ரசிகன் நான். பட்டிமன்றத்தில் மோதிக்கொள்ளும் காட்சிகள் கண்டு ரசிப்பதுண்டு.
சிரிக்க மட்டுமல்ல சிந்திக்கவும் தூண்டக்கூடிய பேச்சுக்கு சொந்தக்காரர் ராஜா. முத்திரை பதிக்கக் கூடிய அளவிற்கு பேசக்கூடியவர் அவர். அவர் முதன்முதலில் விருது பெறுவதாக சொன்னார்.
ஆனால், முதன்முதலாக அவர் என் கையால் விருது பெறுவதில் எனக்கு பெருமை” என்று விருது பெற்ற ஒவ்வொருவரையும் புகழ்ந்து பேசினார்.
தொடர்ந்து பேசிய முதல்வர், ”இந்த தருணத்தில் ஒரு வேண்டுகோளை முத்தமிழ் பேரவைக்கு வைக்கிறேன்.
முத்தமிழறிஞர் நூற்றாண்டு விழா ஆண்டு இது. இந்த ஆண்டு முதல் முத்தமிழறிஞர் பெயரில் ஒரு விருது முத்தமிழ் பேரவை சார்பில் வழங்க வேண்டும் என்று உரிமையோடு கேட்டுக் கொள்கிறேன்.
முத்தமிழுக்கு சிறப்புறத் தொண்டாற்றுபவர்களுக்கு முத்தமிழறிஞர் கலைஞர் விருது வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
பொதுவாக முதலமைச்சர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் முதலமைச்சரிடம் தான் கோரிக்கை வைப்பார்கள்.
ஆனால் முத்தமிழ் பேரவையின் செயலாளர் அமுதன் மீதான உரிமையின் காரணமாக இந்த கோரிக்கையை நான் வைத்திருக்கிறேன். அதனை அவர் தட்டாமல் ஏற்றுக் கொள்வார் என்று நம்புகிறேன்.
இயல் இசை நாடகத்தை காப்பாற்ற வேண்டும் என்பது தமிழை காப்பாற்றுவது, தமிழினத்தை காப்பாற்றுவது.
ஆனால் இன்று சிலர் தமிழுக்கும் தமிழருக்கும் விரோதமான செயல்களை செய்து கொண்டே, தமிழ் முகமூடியை போட்டுக் கொண்டே தமிழ்நாட்டில் உள்ளவர்களையெல்லாம் ஏமாற்றிவிடலாம் என்று கணக்குப் போடுகிறார்கள்.
ஆனால் அவர்கள் போடுவதெல்லாம் தப்புக்கணக்கு தான். அதை புரிய வைக்கும் வகையில் தமிழ்நாட்டு மக்கள் மட்டுமல்ல இந்தியா முழுவதும் உள்ள மக்கள் தக்க பாடத்தை புகட்டுவார்கள்” என்று பேசியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
மோனிஷா
