மறைந்த ஏவிஎம் சரவணன் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (டிசம்பர் 4) நேரில் அஞ்சலி செலுத்தி உள்ளார்.
ஏவிஎம் நிறுவனத்தின் உரிமையாளரும், தயாரிப்பாளருமான ஏவிஎம் சரவணன், வயது மூப்பு காரணமாக இன்று அதிகாலை காலமானார். அவரது உடல் ஏடிஎம் ஸ்டூடியோவில் உள்ள மூன்றாவது தளத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
அவரது உடலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். அவருடன் அமைச்சர் மா சுப்பிரமணியன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
அவரது மறைவிற்கு நடிகர்கள் ரஜினிகாந்த், சிவக்குமார், சூர்யா,விஷால், பார்த்திபன் உள்ளிட்ட ஏராளமான திரையுலக பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
முதல்வர் தனது எக்ஸ் பதிவில்,”தமிழ்த் திரையுலகின் முதுபெரும் ஆளுமைகளில் ஒருவரும் வரலாற்றுப் புகழ்மிக்க AVM நிறுவனத்தின் முகமாகவும் திகழ்ந்த ஏவி.எம். சரவணன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். தமிழ்த்திரையுலகின் பாதையைத் தீர்மானித்து உருவாக்கியதில் ஏவி.எம். நிறுவனத்தின் பங்கு எவ்வளவு முக்கியமானதோ – அதே அளவுக்கு ஏவி.எம்.நிறுவனத்தின் பாதையைத் தீர்மானித்ததில் திரு. சரவணன் அவர்களுடைய பங்கும் அளப்பரியது. புதல்வராகவும் – திரைத்துறை ஆளுமையாகவும் “அப்பச்சி” என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட அவரது தந்தை மதிப்பிற்குரிய ஏவி.எம். அவர்களுக்குப் புகழ் சேர்த்தவர் சரவணன் அவர்கள்.
பேரறிஞர் அண்ணாவின் “ஓர் இரவு”, தலைவர் கலைஞரின் “பராசக்தி”, முரசொலி மாறன் அவர்களது “குலதெய்வம்” என ஏவி.எம். நிறுவனத்துக்கும் திராவிட இயக்கத்தின் திரைப்பயணத்துக்கும் நெடிய தொடர்புண்டு. அந்த பந்தம் குடும்பப் பாசமாகி, எங்கள் குடும்பத்துடன் நெருங்கிப் பழகியவர் ஏவி.எம்.சரவணன் அவர்கள். கடந்த 2023-ஆம் ஆண்டு மே மாதம் ஏவி.எம்-மின் ஹெரிடேஜ் அருங்காட்சியகத்தை நான் பார்வையிடச் சென்றபோது, அந்த நினைவலைகளைப் பகிர்ந்து பாசமுடன் பழகினார்.
அமைதியும் எளிமையுமே பண்புநலமாகக் கொண்டு எல்லோரிடமும் அன்பொழுகப் பழகிய அவரது மறைவால் வாடும் ஏவி.எம் குடும்பத்தாருக்கும், திரையுலக நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என தெரிவத்துள்ளார்.
ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் இரங்கல் :
திரு. ஏ.வி.எம். சரவணன் அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்:
புகழ்பெற்ற தயாரிப்பாளர் திரு. ஏ.வி.எம். சரவணன் காலமானார் என்பதை அறிந்து நான் மிகவும் வருத்தமடைந்தேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். இந்தியத் திரைப்படத் துறையில் நீண்ட வரலாற்றைக் கொண்ட ஏ.வி.எம். நிறுவனத்தை திரு. சரவணன் திறமையாக நடத்தினார். அவர் மாறுபட்ட கதைக்களங்களைத் தேர்ந்தெடுத்து, முழு குடும்பத்தினரும் பார்க்கக்கூடிய படங்களைத் தயாரித்தார். திரு. சிரஞ்சீவியுடன் தயாரிக்கப்பட்ட புன்னமி நாகு திரைப்படம், தலைமுறை இடைவெளியைப் பொருட்படுத்தாமல் இன்றும் பார்வையாளர்களைக் கவர்ந்து வருகிறது. ‘சம்சாரம் ஓக சதுரங்கம்” “ஆ ஒசுடி அடக்கு: லீடர் மெருபு கலலு, சிவாஜு போன்ற படங்கள் பார்வையாளர்களைக் கவர்ந்தன. திரு. சரவணன் அவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
