‘மலையகத் தமிழர்’ விழாவுக்கு செல்ல மத்திய அரசு தாமதமாக அனுமதித்ததால் இலங்கை செல்ல முடியவில்லை என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். mk stalin Speech Ignored
கடந்த நவம்பர் 2 ஆம் தேதி இலங்கை தலைநகர் கொழும்புவில் நடந்த ‘மலையகத் தமிழர்’ விழாவில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அனுப்பிய வீடியோ ஒளிப்பரப்பப்படவில்லை.
இந்நிலையில், “முதல்வரின் உரையை ஒளிப்பரப்ப அனுமதிக்காமல், சிறுமைப்படுத்துவதற்கு முயன்றுள்ள மத்திய பாஜக அரசின் செயல் ஏற்றுக்கொள்ள முடியாதது, கடும் கண்டனத்துக்குரியது” என்று திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கண்டனம் தெரிவித்தனர்.
இதற்கு இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டைமான், “முதல்வரின் உரை புறக்கணிக்கப்படவில்லை. விழா தொடங்குவதற்கு சில மணி நேரத்திற்கு முன்பாக வீடியோ உரை வந்ததால் அதை ஒளிப்பரப்ப முடியவில்லை” என்று விளக்கம் அளித்திருந்தார்.
இதுதொடர்பாக இன்று (நவம்பர் 6) தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்துள்ளார்.
அதில், “இலங்கை செல்வதற்காக தேதி மற்றும் விமான டிக்கெட்டுகளை எல்லாம் ஏற்பாடு செய்துவிட்டு வெளியுறவுத் துறை அனுமதிக்காக நான் காத்துக்கொண்டிருந்தேன். கடந்த 28ஆம் தேதி அனுமதி கேட்டு பொதுத்துறை சார்பில் அனுப்பப்பட்டது.
1ஆம் தேதி இரவு வரை அனுமதி வரவில்லை. அன்றைய தினம் இரவு 8.30 மணி வரை தலைமை செயலகத்தில் இருந்தேன். அதிகாரிகளிடம் கேட்டேன்… அனுமதி வரவில்லை என்றார்கள்.
இதற்கு பிறகு அனுமதி வருவது கடினம் என்ற சூழ்நிலையில், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு அழைத்து, சூழ்நிலையை விளக்கினேன்.
ஒன்றிய அரசிடமிருந்து அனுமதி கிடைக்காததால் நான் பயணம் மேற்கொள்ள இயலாத நிலையில் இருப்பதை சுட்டிக்காட்டி, என்னுடைய பயண ஏற்பாடுகளை ரத்து செய்துவிட்டு வீடு திரும்பினேன். இதையடுத்து 9.30 மணிக்கு அனுமதி கிடைத்தது.
மறுநாள் 2ஆம் தேதி காலையில் 11 மணிக்கு இலங்கையில் இருந்து முதலமைச்சர் அலுவலகத்துக்கு தொடர்பு கொண்டார்கள். அமைச்சரால் வரமுடியாத காரணத்தால் முதல்வர் ஒரு வாழ்த்து செய்தியை அனுப்ப வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள்.
உடனடியாக, பல்வேறு அலுவல்கள், ஏற்கனவே ஒத்துக்கொண்ட நிகழ்ச்சிகள் இருந்தாலும் நேரம் ஒதுக்கி வாழ்த்து செய்தி அனுப்பி வைத்தார்.
மதியம் 2 மணிக்குள்ளாகவே அது அவர்களுக்கு கிடைத்துவிட்டது. நிகழ்ச்சியில் முதல்வரின் வாழ்த்து செய்தி போட்டு காண்பிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்கள்.
ஆனால் என்ன காரணத்தால் இந்த வாழ்த்து செய்தி ஒளிபரப்ப இயலவில்லை என்பது எனக்குத் தெரியவில்லை. எனினும் ஊடகங்கள் வாயிலாக வாழ்த்து செய்தி வந்தது.
இதுதான் 1ஆம் தேதி இரவில் இருந்து 2ஆம் தேதி வரை நடந்தது” என கூறினார். mk stalin Speech Ignored
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
மணிப்பூர் ஆகிவிடுமா மிசோரம்? தேர்தல் நிலவரம் க்ளைமாக்ஸ் ரிப்போர்ட்!