தமிழ் அறிஞர்கள் 21 பேருக்கு தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் விருது வழங்கி முதல்வர் ஸ்டாலின் இன்று கவுரவித்தார்.
சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழ் அறிஞர்களுக்கு விருது வழங்கும் விழா இன்று நடைபெற்றது. விழாவைத் தொடங்கி வைத்து முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார்.
விருது பெறுபவர்களின் பெயரை பட்டியலிட்ட முதல்வர் ஸ்டாலின், “தமிழறிஞர்களுக்கு விருது வழங்கியதன் மூலம் என் தமிழ் கடமையை செய்துவிட்டேன் என நினைத்து மகிழ்ச்சியடைகிறேன். 3,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இனம் தமிழினம்.
திமுகவின் ஆட்சியைத் தமிழ் ஆட்சியாக, தமிழின ஆட்சியாக, நாங்கள் நடத்திக்கொண்டிருக்கிறோம். நாங்கள் என்றால் உங்களையும் சேர்த்துத்தான் சொல்கிறேன். ஈராயிரம் ஆண்டு இலக்கண, இலக்கிய செழுமை கொண்ட மொழிக்குச் செம்மொழி என்ற அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது கழக அரசு. தமிழர்கள் வாழும் இந்த மாநிலத்துக்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டியது கழக அரசு.
தமிழக அரசுத் துறை பணிகளில் நுழைபவர்களுக்குத் தமிழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆலயங்களில் தமிழ் ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. தமிழ்த்தாய் வாழ்த்து மாநில பாடலாக அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரையில் கலைஞர் நினைவு நூலகம், தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமை, உலக பல்கலைக் கழகங்களில் செம்மொழித் தமிழ் இருக்கைகள் எனத் தமிழ் ஆட்சி நடந்து வருகிறது.
2010 முதல் வழங்கப்படாமல் இருந்த முத்தமிழ் கலைஞர் செம்மொழி விருதுகள் இனி ஒவ்வொரு ஆண்டும் கலைஞர் பிறந்தநாளான ஜூன் 3ஆம் தேதி ரூ.10 லட்சம் பரிசுத் தொகையுடன் வழங்கப்படும்.
தமிழ் வளர்ச்சி என்பது மொழியைப் பெருமைப்படுத்துவது மட்டுமல்ல. மொழியைப் பெருமைப்படுத்தும் படைப்பாளிகளைப் போற்ற வேண்டும். கொரோனா காலத்தில் படைப்பாளிகள், விற்பனையாளர்கள் பாதிக்கப்பட்டனர்.
ஜனவரி மாதம் தொடங்க இருந்த புத்தகக் கண்காட்சி தள்ளிப்போனதால் அவர்களுக்கு இழப்பும் அதிகமாக ஏற்பட்டது. ஒரு கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டதாகப் பதிப்பாளர்கள் தெரிவித்தனர். இதையடுத்து ரூ.50 லட்சம் தமிழக அரசு வழங்கியது. அந்த வகையில் இந்த ஆண்டு பதிப்பாளர்கள் விற்பனையாளர்களுக்கு ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது.
புத்தகக் கண்காட்சியைத் தொடங்கி வைக்கச் சென்ற போது ஒரு அறிவிப்பை வெளியிடலாம் என்றிருந்தேன். ஆனால் அப்போது தேர்தல் காலம் என்பதால் அறிவிக்க முடியவில்லை. அதனை இப்போது அறிவிக்கிறேன்.
**புத்தக பூங்கா**
“அனைத்து நூல்களும் ஒரே இடத்தில் கிடைக்கக் கூடிய நோக்கத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக ‘மாபெரும் புத்தக பூங்கா’ அமைக்கலாம் என்றும் அதற்கான நிலத்தை அரசு வழங்கும் என்றும் தெரிவித்துக்கொள்கிறேன்.
தந்தை பெரியார் விருது, பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட துறையின் சார்பிலும், அம்பேத்கர் விருது ஆதிதிராவிடர் நலத்துறை சார்பிலும் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை இந்த விருது பெறுபவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் தான் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. இனி 5 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்க அரசாணை வெளியிடப்பட்டது. மற்ற 18 விருதுகளுக்கான தொகை ஒரு லட்சத்திலிருந்து 2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது” என்றார்.
பின்னர், 21 பேருக்கு விருதை வழங்கி கவுரவித்தார் முதல்வர் ஸ்டாலின். விருதாளர்களுக்கு தங்கப்பதக்கம், பொன்னாடை, விருதுத் தொகைக்கான காசோலையை வழங்கினார்.
**விருது பெற்றவர்கள்**
திருவள்ளுவர் விருது – மு.மீனாட்சி சுந்தரம் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது. ஆனால் அவர் கடந்த வாரம் மறைவெய்தியதால் அந்த விருதை அவரது மனைவி வசந்தா பெற்றுக்கொண்டார்.
தந்தை பெரியார் விருது சமூக நீதிக்காக பணியாற்றி வரும் வரலாற்று ஆய்வாளர் க.திருநாவுக்கரசு அவர்களுக்கு வழங்கப்பட்டது.
டாக்டர் அம்பேத்கர் விருது -முன்னாள் நீதிபதி சந்துருவுக்கு வழங்கப்பட்டது.
பேரறிஞர் அண்ணா விருது – நாஞ்சில் சம்பத்,
காமராஜர் விருது – குமரி அனந்தன்,
மகாகவி பாரதியார் விருது – பாரதி கிருஷ்ணகுமார்,
பாவேந்தர் பாரதிதாசன் விருது – புலவர் செந்தலை கவுதமன்
முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ. விருது – முனைவர் ம.இராசேந்திரன்
கம்பர் விருது – பாரதி பாஸ்கர்
சொல்லின் செல்வர் விருது- சூர்யா சேவியர்
ஜி.யு.போப் விருது – ஏ.எஸ். பன்னீர்செல்வன்
உமறுப்புலவர் விருது – நா.மம்மது
இளங்கோவடிகள் விருது – நெல்லைக் கண்ணன்
தேவநேயப்பாவாணர் விருது – முனைவர் கு.அரசேந்திரன்
சிங்காரவேலர் விருது – கவிஞர் மதுக்கூர் இராமலிங்கம்
மறைமலையடிகளார் விருது – சுகி.சிவம்
அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது – முனைவர் இரா.சஞ்சீவிராயர்
அயோத்திதாசப் பண்டிதர் விருது – ஞான.அலாய்சியஸ்
முதலமைச்சர் கணினி தமிழ் விருது – முனைவர் தனலட்சுமி
சி.பா. ஆதித்தனார் திங்களிதழ் விருது – உயிர்மை திங்களிதழுக்கு வழங்கப்பட்டது. இவ்விருதை இந்த இதழின் ஆசிரியர் அப்துல் ஹமீது எனும் மனுஷ்ய புத்திரன் பெற்றுக்கொண்டார்.
தமிழ்த்தாய் விருது – மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம். விருதை இச்சங்கத்தின் தலைவர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் பெற்றுக்கொண்டனர்.
**-பிரியா**
