எளிமை, நேர்மை, ஒழுக்கம், மனித நேயம், மதச்சார்பின்மை, சமத்துவம், சகோதரத்துவம் கொண்ட திராவிட மாடல் ஆட்சியைத்தான் நாம் நடத்தி வருகிறோம் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சுதந்திர தின விழா உரையில் தெரிவித்துள்ளார்.
நமது நாட்டின் 76ஆவது சுதந்திர தின விழா இன்று (ஆகஸ்ட் 15) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 9 மணிக்கு புனிதஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் பேண்டு வாத்தியங்கள் முழங்கத் தேசிய கீதம் ஒலிக்க தேசியக் கொடி ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.
இதனை தொடர்ந்து, உரையாற்றிய அவர், எண்ணற்ற தியாகிகளின் தன்னலமற்ற தியாகத்தால் பெற்ற விடுதலை இது.
விடுதலை போராட்ட வீரர்களுக்கான மாதாந்திர ஒய்வூதியத் தொகை இன்று முதல் ரூ.18 ஆயிரத்திலிருந்து ரூ. 20,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும்.
அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படி 31%ல் இருந்து 34% ஆக உயர்த்தி வழங்கப்படும்.
தியாகிகளுக்கான குடும்ப ஓய்வூதியம் ரூ. 10,000-ஆக உயர்த்தி வழங்கப்படும்” என அறிவித்தார்.
மேலும், வீரபாண்டிய கட்டபொம்மன், மருது பாண்டிய சகோதரர்களின் வழித் தோன்றல்களுக்கு சிறப்பு ஓய்வூதியம் 10,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்,
இந்திய விடுதலை போராட்டத்தில் தமிழ்நாட்டின் தொடர் பங்களிப்பை இளைஞர்கள் அறியும் வகையில், சென்னையில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் விடுதலை நாள் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.
விடுதலை போராட்ட வீரர் மலையாள வெங்கிடுபதி எத்தலப்பருக்கு ரூ. 2.6 கோடி மதிப்பில் திருப்பூரில் நினைவு மண்டபம் உருவாக்கப்படும்” என புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், “கட்டணமில்லாப் பேருந்து வசதி மூலமாக பெண்களின் சமூகப் பங்களிப்பும், பொருளாதார விடுதலையும் அதிகமாகி இருக்கிறது.
ஓராண்டு காலத்தில் 153 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருக்கிறது, தமிழகத்தின் தொழில் வளர்ச்சி பெருகி இருக்கிறது.. ரூ 2,500 கோடி மதிப்பிலான கோயில் சொத்துகளை ஓர் ஆண்டில் மீட்டுள்ளோம்;
தமிழ்நாட்டில் வாழும் ஒவ்வொரு தனிமனிதனின் கோரிக்கையையும் செயல்படுத்தித் தரும் மனிதனாக நான் இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்.
எளிமை, நேர்மை, ஒழுக்கம், மனித நேயம், மதச்சார்பின்மை, சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றின் அடையாளமாக இருக்கிறார் அண்ணல் காந்தியடிகள்.
இன்றைக்கு நாட்டுக்கு அவசிய, அவசரமான கொள்கைகள் இவைதான். இத்தகைய அனைத்து மனித நேயக்கொள்கைகளும் கொண்ட திராவிட மாடல் ஆட்சியைத்தான் நாம் நடத்தி வருகிறோம்”என்றார்.
- க.சீனிவாசன்
