சிதம்பரம் தீட்சிதர்களின் குழந்தைகளுக்கு இரு விரல் பரிசோதனை நடைபெறவில்லை என்று தேசிய குழந்தைகள் ஆணையத்தின் உறுப்பினர் ஆனந்த் கூறியிருந்த நிலையில், இன்று (மே 26) பரிசோதனை நடந்தது உண்மை என்று தெரிவித்துள்ளார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் மீது குழந்தை திருமணம் நடத்தி வைத்ததாக 8 பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தீட்சிதர்களின் குழந்தைகளுக்கு கட்டாய கன்னித்தன்மை பரிசோதனையான இருவிரல் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது என்று கூறியிருந்தார்.
இதுகுறித்து மின்னம்பலத்தில் புலனாய்வு விசாரணை செய்து செய்தி வெளியிட்டோம். நமது விசாரணையில் குழந்தை திருமணம் நடந்தது உண்மை தான் என்றும் இருவிரல் பரிசோதனை நடைபெறவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தோம்.
இந்தசூழலில், தேசிய குழந்தை உரிமைகள் மற்றும் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் ஆனந்த் நேற்று முன் தினம் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சென்று அங்கு, குழந்தைகள் திருமணம் நடந்ததா? சிறுமிகளுக்கு இரு விரல் பரிசோதனை நடந்ததா என விசாரணை நடத்தினார்.
பாதிக்கப்பட்ட சிறுமிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களிடமும் விசாரணை மேற்கொண்டார்.
இதன் பின் சிதம்பரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஆனந்த் , “இரு விரல் பரிசோதனை நடைபெறவில்லை. இரு விரல் பரிசோதனை நடந்ததற்கான ஆதாராம் இல்லை. ஆனால் பிறப்புறுப்பில் பரிசோதனை நடத்தப்பட்டிருப்பது உண்மை. அதேசமயம் குழந்தைகளிடம் பேசும் போது குழந்தை திருமணம் நடைபெறவில்லை. வற்புறுத்தி கேட்டதால் திருமணம் நடந்ததாக ஒத்துக்கொண்டோம் என கூறினார்கள்” என்றார்.
இருவிரல் பரிசோதனை நடைபெறவில்லை என்று தேசிய குழந்தை உரிமைகள் மற்றும் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினரே கூறிய நிலையில் ஆளுநர் கூறியது பொய் என்பது உறுதியாகியுள்ளது என திமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் கூறினர்.
தேசிய குழந்தை உரிமைகள் மற்றும் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் கூறியது குறித்து நாம் விசாரித்த போது, குழந்தை திருமணம் நடந்த போட்டோக்கள் ஆதாரம் மற்றும் வீடியோ ஆதாரங்கள் கிடைத்தன.
இதுகுறித்து தீட்சிதர்கள் குழந்தைத் திருமணம்… மறைக்கப் பார்க்கும் தேசிய குழந்தைகள் ஆணையம் என்ற தலைப்பில் நேற்று செய்தி வெளியிட்டிருந்தோம்.
இந்தசூழலில் சிதம்பரத்தில் சிறுமிகளுக்கு இருவிரல் மருத்துவப் பரிசோதனை நடைபெற்றதாக தமிழக ஆளுநர் ஆர். என். ரவி அவர்கள் கூறிய தகவல் உண்மைதான், அதற்கான ஆதாரம் ஆணையத்திடம் உள்ளது.
சிலர் வேண்டு மென்றே ஆளுநருக்கு எதிராக தவறான தகவல்களைப் பரப்புகின்றனர் என்று நேற்று முன் தினம் சிதம்பரத்தில் பேட்டி அளித்ததற்கு மாறாக பேசியுள்ளார் ஆனந்த்.
“இரு விரல் பரிசோதனை 100 சதவிகிதம் நடந்திருக்கிறது. அதற்கான ஆதாராம் போலீஸ் ரெக்கார்டில் உள்ளது. கன்னித்திரை இம்பேக்ட் என்று அதில் குறிப்பிட்டுள்ளனர்.
ஆனால் ஊடகங்கள் ஆளுநர் கூறியதற்கு மாற்றுக் கருத்து என்று பரப்பிவிட்டனர். உண்மை என்னவென்றால் ஆளுநர் கூறியபடி சிறுமிகள் துன்புறுத்தப்பட்டுள்ளனர்” என்று இன்று தன்னிலை விளக்கம் அளித்துள்ளார் ஆனந்த்.
இப்படி தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் மாற்றி மாற்றி பேசுவது பல்வேறு யூகங்களுக்கு வழிவகுத்துள்ளது.
பிரியா
அமைச்சர் மஸ்தான் தம்பியின் பதவி பறிப்பு!
செங்கோலை வழங்கிய போது என்ன நடந்தது? திருவாவடுதுறை ஆதீனம் விளக்கம்!

