நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய சிக்கன் சூப்பை ஆரோக்கியமான முறையில் வீட்டில் எப்படி சமைக்கலாம் என்பதை பார்ப்போம்.
பொதுவாக நாம் எப்போதும் சிக்கனை குழம்பு வைத்தோ, எண்ணெயில் பொறித்தோ சாப்பிடுவதையே வழக்கமாக வைத்துள்ளோம். அதற்கு மாறாக சிக்கனை சூப் வைத்து சாப்பிடுவது நமது உடலுக்கு மிகவும் நல்லது. சோர்வாக இருப்பதாக உணரும்போதோ அல்லது இந்த குளிர்காலத்தில் மாலையில் ஒரு கப் டீக்கு பதிலாக சிக்கன் சூப்பை பருகலாம். கடைகளில் இருந்து வாங்காமல் வீட்டில் இருந்தே ஆரோக்கியமான முறையில் நாம் தயாரிப்பதன் மூலமாக மேலும் நன்மை அளிக்கிறது. குறிப்பாக இஞ்சி, பூண்டு, காய்கறிகள் சேர்த்து தயாரிக்கப்படும் சிக்கன் சூப்பை சாப்பிடுவதன் மூலமாக நம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி வலுப்பெறுகிறது. சளி, இருமல், காய்ச்சல் போன்ற குளிர்காலத்தில் வரக்கூடிய நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கவும் இந்த சிக்கன் சூப் பயன்படுகிறது.
சிக்கன் சூப் நோய் எதிர்ப்பு சக்தியை எப்படி அதிகப்படுத்துகிறது?
கோழி இறைச்சியில் புரதம், ஜிங்க் மற்றும் அமிலோ அமிலங்கள் உள்ளன. சாதாரணமாக கோழி இறைச்சியை நாம் உண்பதன் மூலமாக உடலில் உள்ள கிருமிகளை எதிர்த்துப் போராடுகிறது. கோழியில் உள்ள கொலக்சஜன் நம் உடலுக்கு தேவையான சக்தியை தருகிறது. சிக்கன் சூப்களில் இஞ்சி, பூண்டு, சில காய்கறிகளை சேர்ப்பதன் மூலமாக மேலும் சக்தி வாய்ந்ததாக இந்த சிக்கன் சூப் நம் உடலில் செயல்படுகிறது. ஒரு கப் சிக்கன் சூப்பில் நம் உடலுக்கு தேவையான சத்துக்கள் நிறைந்துள்ளது. நம் உடலுக்கு வலிமையையும், நீர் சத்துக்களும் குறையாமல் பார்த்துக் கொள்கிறது.
சிக்கன் சூப் செய்ய என்ன தேவை?
சிறிதளவு கோழி இறைச்சி, இஞ்சி, பூண்டு, வெங்காயம், கேரட், கொத்தமல்லி ஆகியவை தேவை. மஞ்சள் தூள் மற்றும் மிளகு தூள் சேர்ப்பது இன்னும் நல்லது. சுவைக்காக எலுமிச்சை மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்துக்கொள்ளலாம்.
எப்படி செய்வது?
முதலில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் எடுத்து பாத்திரத்தில் விட வேண்டும். அதில் சீரகம், சின்ன வெங்காயம், அரை தக்காளி, கேரட் மற்றும் வீட்டில் இருக்கக்கூடிய கொத்தமல்லி போன்றவற்றை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பிறகு சிக்கன் துண்டுகளை சிறுசிறு துண்டுகளாக வெட்டி சேர்க்க வேண்டும். வெறும் இறைச்சியை மட்டும் அல்லாமல் எலும்புகளையும் சேர்த்து செய்தால் மேலும் நல்லது.
நன்றாக வதங்கிய பிறகு அதில் தேவைக்கேற்ப நீரினை சேர்த்து மிளகுத்தூள் மற்றும் உப்பை சேர்த்துக்கொள்ள வேண்டும், 30 நிமிடம் வரை கோழி இறைச்சி நன்றாக வேக வேண்டும். அதில் சிறிது எலுமிச்சை சாறு விட்டு அடுப்பில் இருந்து இறக்கினால் ஆரோக்கியமான சிக்கன் சூப் தயார்.
மிகவும் எளிமையான முறையில் சமைக்கக்கூடிய இந்த சிக்கன் சூப் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தருவதோடு உடலை வலிமையாகவும் மாற்றுகிறது. ஆரோக்கியமான முறையில் சுத்தமான காய்கறிகளை கொண்டு எளிமையாக சமைக்க கூடிய இந்த சிக்கன் சூப்பை உங்கள் உணவில் பயன்படுத்திக் கொள்ளுங்கள். சூப் தயாரித்த உடனே அதனை சூடாகக் குடிக்க வேண்டும். சிக்கன் வெறும் உணவு என்பதோடு ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
