கறிக்கோழி விலை தொடர் சரிவு: ரூ.300 கோடி இழப்பு!

Published On:

| By Balaji

கறிக்கோழி விலை தொடர்ந்து சரிவடைந்து வருவதால் கடந்த 10 நாட்களில் மட்டும் பண்ணையாளர்களுக்கு சுமார் ரூ.300 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் பல்லடம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் 25,000 கறிக்கோழி பண்ணைகள் உள்ளன. இவற்றின் மூலம் தினசரி 30 லட்சம் கிலோ கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு, தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. பண்ணை கொள்முதல் விலையை பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்புக் குழு (பிசிசி) தினமும் நிர்ணயம் செய்கிறது.

ADVERTISEMENT

பொதுவாக கொள்முதல் விலை தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் போன்ற திருவிழா நாட்களில் அதிகரிப்பதும், புரட்டாசி, கார்த்திகை மாதங்கள் மற்றும் ரம்ஜான் பண்டிகை காலங்களில் குறைவதும் வாடிக்கையான ஒன்று.

இந்த நிலையில் கார்த்திகை மாதத்தையொட்டி தொடர் சரிவை சந்தித்த கறிக்கோழி விலை, கடந்த 1ஆம் தேதி கிலோ ரூ.93 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. பின்னர் படிப்படியாக உயர்ந்து கிலோ ரூ.102 ஆனது. ஆனால் கடந்த 8ஆம் தேதி மற்றும் 10ஆம் தேதி விலை மீண்டும் சரிவடைந்ததால் கிலோ ரூ.93 ஆனது. இந்த விலை ஏற்றத்தாழ்வு பண்ணையாளர்களுக்கு கடும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

இதுகுறித்து பேசியுள்ள தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் மார்க்கெட்டிங் சொசைட்டி தலைவரும், கறிக்கோழி உற்பத்தியாளருமான வாங்கிலி சுப்ரமணியம், “ஒரு கிலோ கறிக்கோழியின் உற்பத்தி செலவு ரூ.100 ஆகிறது. தற்போது, வியாபாரிகள் கட்டாயப்படுத்தி விற்பனை செய்ய வைக்கின்றனர். அதாவது 10,000 கிலோ விற்பனை செய்யும்போது, கூடுதலாக 1,000 கிலோ சேர்த்து விற்பனை செய்யும்படி நிர்பந்திக்கின்றனர்.

அதனால் கொள்முதல் விலை ரூ.80 ஆக குறைந்தது. அதுவும் கிலோவுக்கு, கொள்முதல் விலையில் இருந்து ரூ.5 வரை குறைத்தே வியாபாரிகள் வாங்குகின்றனர். 15 சதவிகிதம் அதிகம் விற்பனை செய்ய நினைக்கும்போது, வியாபாரிகள் விலையைக் குறைத்து கேட்கின்றனர். அதன் காரணமாக கொள்முதல் விலை குறைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

உற்பத்தி செலவைக் காட்டிலும், கொள்முதல் விலை குறைவாக இருப்பதால், ஒரு கிலோவுக்கு ரூ.15 வீதம் பண்ணையாளர்களுக்கு இழப்பு ஏற்படுகிறது. அந்த வகையில் தினமும் தலா ரூ.30 கோடி என கடந்த 10 நாட்களில் சுமார் ரூ.300 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

**-ராஜ்**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share