கிரிப்டோ செஸ் போட்டியில் உலக சாம்பியன் கார்ல்சனை வீழ்த்தி பிரக்ஞானந்தா வெற்றி பெற்றுள்ளார்.
எஃப்.டி.எக்ஸ் கிரிப்டோ செஸ் கோப்பை போட்டி அமெரிக்காவில் உள்ள மியாமி நகரில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த இளம் வீரரும் கிராண்ட் மாஸ்டருமான பிரக்ஞானந்தா விளையாடி வருகிறார்.

முதல் நான்கு சுற்றுப் போட்டிகளிலும், பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார். 5-வது சுற்றில் வியட்நாமைச் சேர்ந்த குவாங் லியம் லீயிடம் தோல்வி அடைந்தார்.
6-வது சுற்றில் போலந்து வீரர் கிரைஸ்டாப் டுடா-விடம் தோல்வி அடைந்தார். 6 சுற்றுப் போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் பிரக்ஞானந்தா தோல்வி அடைந்தார்.
இதன் மூலம் புள்ளிப் பட்டியலில் கார்ல்சன் முதலிடத்திலும், பிரக்ஞானந்தா இரண்டாவது இடத்திலும் இருந்தனர்.

இதனால் இறுதிப் போட்டியை கார்ல்சன் மற்றும் பிரக்ஞானந்தா எதிர்கொண்டனர். 7-வது சுற்றான இறுதிப்போட்டி நேற்று (ஆகஸ்ட் 21) அன்று நடைபெற்றது. இதில் பிரதான போட்டி 2-2 என டிரா ஆன நிலையில், டை பிரேக்கரில் கார்ல்சனை வென்று வெற்றியைத் தனதாக்கினார் பிரக்ஞானந்தா.
இதன்மூலம் உலக சாம்பியன் கார்ல்சனை பிரக்ஞானந்தா மூன்று முறை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
செல்வம்