44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இன்று (ஜூலை 30) களமிறங்கிய பிரக்ஞானந்தா, எஸ்டோனியா அணி வீரரை 41வது நகர்த்தலில் வென்றார்.
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இன்று (ஜூலை 30) நடைபெற்ற ஆட்டத்திலும் இந்திய வீரர்களின் வெற்றி வீறுநடை போடுகிறது. முன்னதாக தமிழகத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் முரளி, நந்திதா வெற்றிபெற்ற நிலையில், தற்போது பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட உலக சாம்பியனான கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய இளம் தமிழக வீரர் பிரக்ஞானந்தா, தனது முதல் போட்டியில் வெற்றிபெற்றுள்ளார்.
இந்திய ஓபன் அணி பி பிரிவில் விளையாடிய போட்டியில் பிரக்ஞானந்தா, எஸ்டோனியா அணி வீரர் கிரில் சுக்கவினையை வீழ்த்தி வெற்றிபெற்றார். கருப்பு நிற காய்களை கொண்டு விளையாடிய அவர், 41வது நகர்த்தலில் எஸ்டோனியா வீரரை வீழ்த்தினார். அதுபோல் இந்திய ஓபன் அணி பி பிரிவில் விளையாடிய மற்றொரு தமிழக வீரர் அதிபன் பாஸ்கரனும் வெற்றிபெற்றார்.
இந்திய அணியின் சி பிரிவில் களமிறங்கிய வீராங்கனை பிரத்யுஷா போடாவும், அவருக்கு எதிராக ஆடிய சிங்கப்பூர் வீராங்கனை யாங் ஹசேலும் டிரா செய்ததால், அதாவது இருவருடைய ஆட்டமும் டிரா ஆனது. இதையடுத்து, இருவருக்கும் தலா அரை புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது. அதுபோல், மகளிர் அணியின் ஏ பிரிவு ஆட்டத்தில் களமிறங்கிய இந்திய வீராங்கனை தானியா, அர்ஜெண்டினா வீராங்கனை போர்டா ரோடாஸை வென்றார்.
வெள்ளை காய்களுடன் களம் இறங்கிய அவர், 36வது நகர்த்தலில் போர்டாவை வீழ்த்தினார். அதுபோல், இந்திய ஏ அணியில் அங்கம் வகித்த வீரர்கள் ஹரிகிருஷ்ணா, நாராயணன் ஆகிய இருவரும் மால்டோவா அணிக்கு எதிராக வெற்றி பெற்றனர். இரண்டாவது சுற்றில் இந்திய ஓபன் பி அணியினர் மூன்று வெற்றிகளை பெற்று, எஸ்டோனியாவை வீழ்த்தினர்.
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் முதல் சுற்று, இரண்டாம் சுற்று ஆட்டங்களில் நம் தமிழக வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தொடர்ந்து அசத்திவருகின்றனர்.
ஜெ.பிரகாஷ்