“தமிழ் மொழி சிறப்பு, வளர்ச்சி, பண்பாடு, கலாசாரத்தை உலக அளவுக்கு எடுத்துச் சென்றதன் பெருமை மோடிக்கே சாரும்” என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பேசிய மத்திய இணையமைச்சர் எல்.முருகன், “இரண்டு மாதங்களுக்கு முன்பே (மே 25, 2022) இதே நேரு விளையாட்டு அரங்கத்துக்கு வந்திருந்த நம் பிரதமர் மோடி, மத்திய அரசின் திட்டங்களை தொடங்கிவைத்தார். தற்போது, சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த திரெளபதி முர்முவை புதிய ஜனாதிபதியாக்கி, வரலாற்றுச் சாதனை படைத்திருக்கிறார். இதன்மூலம் சமூக நீதியின் தலைவராக இங்கு வந்துள்ளார். மேலும், இந்த எட்டாண்டுகளில் எண்ணற்ற திட்டங்களை பிரதமர் மோடி நம் நாட்டுக்கு கொடுத்துள்ளார்.
தமிழ் மொழி சிறப்பு, வளர்ச்சி, பண்பாடு, கலாசாரத்தை உலக அளவுக்கு எடுத்துச் சென்றதன் பெருமை மோடிக்கே சாரும். மோடியின் சொந்த தொகுதியான வாரணாசியில் மகாகவி பாரதிக்கு இருக்கை அமைத்து தமிழகத்துக்கு மேலும் பெருமை சேர்த்தார்கள். மழையை நம்பி மக்கள் இருப்பதுபோல, அவர்களின் நம்பிக்கையைக் காக்கும் வகையில் பிரதமர் 8 ஆண்டுகள் சிறந்த ஆட்சியை கொடுத்துக்கொண்டிருக்கிறார்.
செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்துவதற்குக் காரணம் பிரதமர் மோடியும் முதல்வர் ஸ்டாலினுமே . பிரதமர் மோடி விளையாட்டுத் துறையை நன்கு மேம்படுத்தி வருகிறார். அதிலும் தமிழகத்தைச் சேர்ந்த 4 வீரர்களுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி பெருமைப்படுத்தியுள்ளார்” என்றார்.
ஜெ.பிரகாஷ்
