சென்னையில் நடைபெற்று வரும் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இரண்டாம் சுற்றில் களம் இறங்குகிறார், தமிழக வீரர் பிரக்ஞானந்தா.
சென்னை மகாபலிபுரத்தில் நடைபெற்று வரும் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில், இந்திய அணி தொடர்ந்து அசத்திவருகிறது. நேற்று (ஜூலை 29) நடைபெற்ற முதல் சுற்றுப் போட்டியில், ஓபன் பிரிவில் 6 புள்ளிகளும், மகளிர் பிரிவில் 6 புள்ளிகளும் பெற்று அசத்தல் வெற்றி பெற்றது. மகளிர் பிரிவில் 3 அணிகளும் எதிர்அணிகளை ஒயிட் வாஷ் செய்தது. போட்டியில் பங்கு பெற்ற 24 பேரும் அடுத்தடுத்து வெற்றி பெற்றனர்.
இந்த நிலையில், இன்று (ஜூலை 30) இரண்டாம் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் உலக சாம்பியனான கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய இளம் தமிழக வீரர் பிரக்ஞானந்தா இன்று களம் காண்கிறார். இன்றைய ஆட்டத்தில் இந்திய ஓபன் அணி ஏ பிரிவு மால்டோவா அணியுடன் மோதுகிறது. இதில் தமிழக வீரர்கள் ஹரிகிருஷ்ணா, சசிகிரண், ஶ்ரீநாத் நாரயணன் மற்றும் அர்ஜூன் எரிகைசி ஆகியோர் விளையாடி வருகின்றனர்.
இந்திய ஓபன் அணி பி பிரிவு எஸ்டோனியா அணியுடன் மோதுகிறது. இதில் தமிழக வீரர்கள் குகேஷ், பிரக்ஞானந்தா, அதிபன் மற்றும் ரவுனக் சத்வாணி ஆகியோர் விளையாடுகின்றனர். இந்திய ஓபன் அணி சி பிரிவு, மெக்சிகோ அணியுடன் மோதுகிறது. இதில், கங்குலி, சேதுராமன், கார்த்திகேயன் முரளி ஆகியோர் விளையாடுகின்றனர். இந்திய மகளிர் அணி ஏ அணி அர்ஜென்டினா அணியுடன் மோதுகிறது. இதில் கொனெரு ஹம்பி, வைஷாலி, தனியா சச்தேவ், குல்கர்னி பாக்தி ஆகியோர் விளையாடுகின்றனர்.
இந்திய மகளிர் அணி பி பிரிவு, லாட்வியா அணியை எதிர்கொள்கிறது. இதில், வந்திகா அகர்வால், பத்மினி ராவுட், சவுமியா சாமிநாதன், கோமேஸ் மேரி அண் ஆகியோர் விளையாடுகின்றனர். இந்திய மகளிர் அணி சி பிரிவு, சிங்கப்பூர் அணியுடன் மோதுகிறது. இதில் கர்வதே ஈஷா, நந்திதா, விஷ்வா வானவாலா, பிரத்யுஷா போடா ஆகியோர் விளையாடுகின்றனர்.
ஜெ.பிரகாஷ்