மனதைத் தொடுகிற கதையா?
மின்னல் முரளி, தள்ளுமாலா, 2018, ஏஆர்எம் என்று ஒவ்வொரு ஆண்டும் ஒரு ‘மெகா’ ஹிட் தருகிற வழக்கத்தைத் தொடர்ந்து வருகிறார் மலையாள நடிகர் டொவினோ தாமஸ். ஆண்டுக்கு நான்கைந்து படங்களில் அவர் நாயகனாக நடித்தாலும், அவற்றில் ஏதேனும் ஒன்று இந்த உயரத்தைத் தொடும் அளவுக்கான உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் சேர்ந்துவிடுமா என்ற எதிர்பார்ப்பைத் திரைக்கு வரும் முன்னே உருவாக்கியது ‘நரிவேட்டா’. cheran tovino thomas narivetta movie review may 23
அனுராஜ் மனோகர் இயக்கியுள்ள இப்படத்தில் இயக்குனர் சேரன், சூரஜ் வெஞ்சாரமூடு, ஆர்யா சலீம், பிரியம்வதா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜேக்ஸ் பிஜோய் இதற்கு இசையமைத்திருக்கிறார். இது தமிழில் ‘நரிவேட்டை’ என்ற பெயரில் ‘டப்’ செய்யப்பட்டுள்ளது.
பழங்குடியின மக்களின் போராட்டம், அவர்களைக் கட்டுப்படுத்தக் குவிக்கப்படுகிற போலீஸ் படை, இடையிடையே சமாதானப் பேச்சுகள், அதன் பலன் பூஜ்யம் ஆனதைக் காட்டியது ‘நரிவேட்டை’ ட்ரெய்லர்.
எப்படிப்பட்ட திரையனுபவத்தைத் தருகிறது இப்படம்?

ஒரு போராட்டத்தின் கதை!
2003ஆம் ஆண்டு கதை நிகழ்வதாகக் காட்டுவதில் இருந்து இத்திரைப்படம் தொடங்குகிறது.
ஒரு மலையோரப் பகுதியில் சில பழங்குடியின மக்கள் வாழ்கின்றனர். தேன் எடுப்பதைத் தவிர வேறெந்த வேலைக்காகவும் அவர்கள் வனத்திற்குள் நுழைய முடியாது எனும் கட்டுப்பாடு. மலையடிவாரத்தில் இருக்கும் ஊர்களில் அவர்களுக்குத் தேன் எடுப்பதைத் தவிர வேறெந்த வேலைகளும் தருவதில்லை என்றிருக்கிற அங்குள்ளவர்களின் மனப்பாங்கு. இதனால், அவர்கள் அன்றாடத் தேவையான உணவுக்காக அங்குமிங்கும் திரிய வேண்டிய நிலை.
பழங்குடியின மக்கள் குடியிருப்பதற்கு நிலம் ஒதுக்கித் தரப்படும் என்று அரசு வாக்குறுதி அளித்து ஒன்றரை ஆண்டுகள் ஆனபிறகும், அது செயல்பாட்டுக்கு வராத சூழல். அதனை எதிர்த்து சி.கே.சாந்தி (ஆர்யா சலீம்) எனும் பழங்குடியினப் பெண்மணி அம்மக்களை ஒன்றுதிரட்டுகிறார்.
மலைப்பகுதியில் வேலி இட்டு குடிசைகள் அமைத்து ஒரு போராட்டத்தைத் தொடங்குகிறார். அது அடுத்தடுத்த நாட்களும் தொடர, காவல் துறை அதிகாரிகள் மீதான அழுத்தம் அதிகரிக்கிறது. சூழலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், அங்கு ஒரு படைப்பிரிவு வரவழைக்கப்படுகிறது.
இன்னொரு பக்கம், அந்த படைப்பிரிவில் இருக்கிற கான்ஸ்டபிள் வர்கீஸ் பீட்டரின் (டொவினோ தாமஸ்) சூழல் விளக்கப்படுகிறது.
அதிகளவில் வயல்களைக் குத்தகைக்கு எடுத்து பெருமழையினால் அதற்கான பணத்தைக் கொடுக்க முடியாமல் தற்கொலை செய்தவர் வர்கீஸின் தந்தை. பிறகு தாய் (ரினி உதயகுமார்) அவரை வளர்த்து ஆளாக்குகிறார்.
படிப்பை முடித்துவிட்டு குறிப்பிட்ட அரசு வேலைகளில் தான் சேருவேன் என்று பிடிவாதமாகத் தேர்வுகளுக்குப் படித்து வருகிறார் வர்கீஸ். குடும்பச் சூழல் புரியாமல் தன்னலத்தை மட்டுமே பார்க்கிறான் என்று அவரது தாய் கோபப்படுகிறார்.
கிட்டத்தட்ட அதே மனநிலையில் இருக்கிறார் பள்ளிப்பருவம் முதலே வர்கீஸைக் காதலித்து வரும் நான்சி (பிரியம்வதா கிருஷ்ணன்). ஒரு வங்கியில் அவர் காசாளராகப் பணியாற்றுகிறார். ஆனால், அவரது குடும்பம் கொஞ்சம் வசதியானது.
அவரது தந்தை தனது மகளைக் கல்யாணம் செய்து தர முடியாது என்று வர்கீஸ் மற்றும் தாய்மாமனிடம் ‘கறாராக’ச் சொல்லிவிடுகிறார். ‘வீட்டை விட்டு ஓடிவந்து தன்னால் திருமணம் செய்ய முடியாது’ என்கிறார் நான்சி.
அதனால், வேறு வழியில்லாமல் ஏதேனும் ஒரு பணியில் சேர்ந்தேயாக வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறார் வர்கீஸ்.
அந்தச் சூழலில், அவர் கான்ஸ்டபிளாகத் தேர்வாகியிருப்பதாகத் தகவல் வருகிறது. அதன் தொடர்ச்சியாக, அதற்கான பயிற்சியில் பங்கேற்கிறார் வர்கீஸ்.
விருப்பமே இல்லாமல் வேலைக்கு வந்த வர்கீஸ், அந்த மலைப்பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவரை மார்பில் சுட்டுக் கொன்றதாக வழக்கு பதிவாகியிருக்கிறது. இதற்காக, துறைரீதியிலான விசாரணை அவர் மீது மேற்கொள்ளப்படுகிறது.
அதனால், அவரை சில போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
உண்மையிலேயே போராட்டத்தில் ஈடுபட்டவரை வர்கீஸ் சுட்டாரா? இடையில் என்ன நடந்தது? அப்படியொரு சூழ்நிலைக்கு ஆளாக்கியது அவரது முன்கோபமா? இக்கேள்விகளுக்குப் பதிலளிக்கிறது ‘நரிவேட்டை’யின் மீதி.
மேற்சொன்ன இரண்டு கதைகளும் ஒன்றிணைகிற புள்ளி என்ற ஒன்று திரைக்கதையில் தேவை. அது சரியாக அமைந்தால், ஒரு படைப்பு நம் மனதைத் தொடும்.
அது ‘நரிவேட்டை’யில் இருக்கிறதா என்றால் ‘இல்லை’ என்றே சொல்ல வேண்டும். அதன் காரணமாக, சட்டென்று நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகிற காட்சிகளும் அதன் ஆக்கமும் நோக்கத்தை நிறைவேற்றாமல் அங்குமிங்கும் சுற்றியலைகிறது.

சேரனின் இருப்பு!
நாயகன் டொவினோ தாமஸ் வேலைக்குச் செல்லாமல் ஊர் சுற்றியலைகிற இளைஞனாகத் தோன்றும்போதும் சரி; காவல் துறையில் புதிதாக வேலைக்குச் சேர்ந்த காவலராக நிலைமை புரியாமல் தன்னியல்பை வெளிப்படுத்துகிற போதும் சரி; ஒரு சாதாரண இளைஞனாகத் திரையில் தெரிகிறார்.
பிரியம்வதா கிருஷ்ணன் நிறைய காட்சிகளில் வலிந்து திணிக்கப்பட்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது. அதையும் மீறி, அவரது தோற்றமும் நடிப்பும் நம்மைக் கவர்கிறது.
இந்த படத்தில் கேசவதாஸ் எனும் ஐபிஎஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார் இயக்குனர் சேரன். மலையாளப் படத்திலும் அவர் தமிழ் பேசுகிறவராகவே தோன்றியிருக்கிறார் என்பது ‘டப்பிங்’கில் தெரிகிறது.
நிறையவே வில்லத்தனம் கலந்த பாத்திரம். ‘அதில் சேரன் பொருந்துகிறாரா’ என்று கேட்கும் அளவுக்கு நிறைய காட்சிகள் தரப்படவில்லை அல்லது தணிக்கைக்குப் பின் நம் பார்வைக்கு வைக்கப்படவில்லை. அதனால் அவரது இருப்பு எந்த வகையிலும் நம் கவனத்தைக் குவிப்பதாக இல்லை.
’வீர தீர சூரன்’னில் கலக்கிய சூரஜ் வெஞ்சாரமூடுவுக்கு இதில் அடக்கி வாசிக்கிற பாத்திரம். தனது காட்சிகளில் அவர் சிறப்பாக வந்து போயிருக்கிறார்.
இது போக ரினி உதயகுமார், ஆர்யா சலீம், பிரசாந்த் மாதவன், பிரணவ் தியோபின் என்று பலர் நடித்துள்ளனர். பின்னணியில் வந்து போனவர்கள் பல டஜன் இருப்பார்கள்.
’இது ஒரு டப்பிங் படம்’ என்று நாம் உணராத வண்ணம், புதிய குரல்களைப் பயன்படுத்தியிருக்கிறார் அதனைக் கையாண்டிருக்கும் ஆர்.பி.பாலா. பல இடங்களில் வசனங்கள் ‘ஒரு வழக்கமான தமிழ் படம்’ போன்றே தெரிகின்றன.
அபின் ஜோசப் இதன் எழுத்தாக்கத்தைக் கையாண்டிருக்கிறார். இப்படத்தின் கதை வயநாட்டு மலைப்பிரதேசங்களில் நிகழ்வதாகச் சொல்லியிருக்கிறார்.
2003இல் வயநாட்டிலுள்ள முத்தங்காவில் பழங்குடியின மக்கள் சிலர் போராட்டம் நடத்தினர். கேரள அரசு ஏற்கனவே அறிவித்தவாறு, உடனடியாகப் பழங்குடியின மக்கள் வாழ்வதற்காக நிலம் ஒதுக்க வேண்டும் என்று கோரினர். ஒன்றரை ஆண்டுகளாக அது நிலுவையில் இருப்பதற்கு முடிவு கட்டப்பட வேண்டும் என்றனர்.
அதனை மையப்படுத்திக் கதை அமைத்த அபின் ஜோசப், திரைக்கதையின் முன்பாதியில் டொவினோ தாமஸின் சூழலுக்கு முக்கியத்துவம் தந்திருக்கிறார். அதற்கேற்ப, பின்பாதியில் அவர் மலைப்பிரதேசத்தில் வாழும் அம்மக்களோடு தான் கொண்டிருக்கிற முரண்களைக் களையும் விதமாகச் சில காட்சிகள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். அதனைக் கோட்டை விட்டிருக்கிறார் அபின் ஜோசப்.
தணிக்கைத் துறையின் கெடுபிடிகளில் எவ்வளவு உள்ளடக்கம் சிக்கியது எனத் தெரியவில்லை. ஆனால், திரையில் படத்தைப் பார்க்கையில் நம்மால் முழுவதுமாக ஒன்ற முடியவில்லை. கதாபாத்திரங்களின் பிரச்சனைகளை நமக்கானதாக நோக்க முடியவில்லை.
இயக்குனர் அனுராஜ் மனோகர் அதனைச் சரிவரக் கையாளாமல் விட்டிருக்கிறார்.
உயரதிகாரியாக நடித்த சேரனிடம் கான்ஸ்டபிள்கள் இருவர் வெளிப்படையாகப் பேசுவதும், ‘அதனைச் செய்யுங்கள் இதனைச் செய்யுங்கள்’ என்று கோருவதும், வழக்கமான ‘கமர்ஷியல் படங்களை’விட மோசமான வகையில் திரையில் வெளிப்பட்டிருக்கிறது.
முக்கியமாக, நாயகன் பாத்திரத்தோடு ரசிகர்கள் ஒன்ற வேண்டிய இடங்களை ‘பிளாங்’ ஆக விட்டிருக்கிறார் இயக்குனர்.
ஒளிப்பதிவாளர் விஜய், தயாரிப்பு வடிவமைப்பாளர் பாவா இருவரும் திரையில் ஒவ்வொரு பிரேமும் அழகியலோடு இருக்க வேண்டும் என்று மெனக்கெட்டிருக்கின்றனர். கூடவே, ஒரு சீரியஸ் கதையை திரையில் பார்க்கிற உணர்வை ஏற்படுத்த முயன்றிருக்கின்றனர்.
இயக்குனர் கூற முயன்ற கதையைத் தனித்தனியே சொல்லவா? ஒரேநேரத்தில் அக்காட்சிகளை அடுத்தடுத்து திரையில் காட்டவா என்று குழப்பத்தில் தவித்திருக்கிறார் படத்தொகுப்பாளர் ஷமீர் முகம்மது. அது பின்பாதி ஏற்படுத்த வேண்டிய தாக்கத்தை அடியோடு மட்டுப்படுத்தியிருக்கிறது.
இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜோய் ‘ஓகே’ ரகத்தில் பாடல்கள் தந்திருக்கிறார். ஆனால், பின்னணி இசையால் படத்தைத் தாங்கிப் பிடிக்க முயன்றிருகிறார். சில இடங்களில் அவருக்கு வெற்றி கிடைத்திருக்கிறது.
போராட்டக் களத்தில் நிகழ்கிற அசம்பாவிதங்கள், மோசமான அச்சம்பவங்களின் பின்னணி, அதனைத் திட்டமிடுகிற அதிகார வர்க்கம் என்று திரையில் நாம் காணாத சிலவற்றைக் காண்பிக்க முயன்றிருக்கிறார் இயக்குனர் அனுராஜ் மனோகர். அமைச்சர்களாகச் சிலரைக் காண்பித்தாலும், படத்தில் அரசுக்கு எதிரான வசனங்கள் இல்லை.
‘சென்சாரில் சிக்கிவிடக் கூடாது’ என்ற பயம் அதற்குக் காரணமாக இருக்கலாம். ஆனால், இப்படியொரு கதையில் அப்படிப்பட்ட அம்சங்கள் இல்லாதது ‘இது உண்மைக்கதையா’ என்ற கேள்வியை எழுப்ப மட்டுமே துணை நிற்கும். அது போகச் சில லாஜிக் மீறல்களும் உண்டு. ’கதையை முடிச்சாகணுமே’ என்கிற கட்டாயத்தில் அவற்றுக்கு இடம் தந்திருக்கிறார் இயக்குனர்.
ஆக, ‘பேண்டஸி’யை விரும்புகிற ரசிகர்களும், ‘யதார்த்தம்’ வேண்டுமென்று நினைப்பவர்களும் ஒருசேர விலகி நிற்கிற நிலைமைக்கு ஆளாகியிருக்கிறது ‘நரிவேட்டை’. டொவினோ தாமஸ், சூரஜ் வெஞ்சாரமூடு, சேரன் என்று திரையில் வித்தியாமானதொரு ‘காம்போ’ கைகோர்த்தும் அது நிகழ்ந்திருப்பது வருத்தம் தரும் விஷயம் தான்..!
