ஆட்டோகிராஃப், தனது படைப்புகளின் வழியே சமூகத்தைப் பிரதிபலித்திட வேண்டும், அதில் துளியேனும் மாற்றம் நிகழ்ந்திட வேண்டுமென்ற நோக்கோடு செயல்பட்டு வருகிற இயக்குனர் சேரனின் திரை வாழ்வில் மிக முக்கியமான திரைப்படம்.
2004ஆம் ஆண்டு பிப்ரவரி 20ஆம் தேதியன்று வெளியானது. இன்றோடு இப்படம் வெளியாகி 21 ஆண்டுகள் ஆகின்றன. அதையொட்டி, விரைவில் ‘ஆட்டோகிராஃப்’ மீண்டும் தியேட்டர்களில் வெளியாகவிருக்கிறது.
இந்த ரி-ரீலீஸை ஒட்டி ஏஐ நுட்பத்தில் ‘ஆட்டோகிராஃப்’ ட்ரெய்லர் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதனை மலையாள நடிகர் டொவினோ தாமஸ், இயக்குனர்கள் ஆர்.பார்த்திபன், லோகேஷ் கனகராஜ், சசிகுமார், பா.ரஞ்சித், சமுத்திரக்கனி, பாண்டிராஜ், சிம்புதேவன், விஜய் மில்டன், பிரசன்னா, சினேகா, ஆரி, அனுராஜ் மனோகர் ஆகியோர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளனர்.
செயற்கையாகச் சிறகை அசைக்கும் பறவைகளின் பின்னணியில் தான் கடந்து வந்த பாதையை, மனிதர்களை நாயக பாத்திரம் அசை போடுவதைக் காட்டும் வகையில் இந்த ட்ரெய்லர் அமைந்துள்ளது.

ஒருவேளை ‘ஜென்ஸீ’ தலைமுறையினரை தியேட்டருக்கு வரவழைக்க, இந்த உத்தி உதவும் என்று சம்பந்தப்பட்டவர்கள் நினைத்திருக்கலாம். ஆனாலும், ‘ஆட்டோகிராஃப்’ படத்தை ரசித்து, சிலாகித்து, இன்றும் அப்படத்தோடு தங்களது வாழ்வைப் பொருத்திப் பார்த்தவர்களுக்கு இந்த ட்ரெய்லர் எந்தளவுக்கு உவப்பைத் தரும் என்று தெரியவில்லை.
’ஆட்டோகிராஃப்’ கதை!
முப்பதுகளில் இருக்கும் செந்தில்குமார் என்ற இளைஞன், தனது திருமண அழைப்பிதழை நண்பர்கள், தெரிந்தவர்களுக்குத் தருவதற்காகச் சில ஊர்களுக்குச் செல்கிறார். அப்போது, தனது பள்ளி, கல்லூரி நாட்களில் கடந்து வந்த காதல் இணையையும், வேலைக்குச் சென்றாக வேண்டிய நிர்ப்பந்த காலகட்டத்தில் தன்னோடு துணை நின்ற தோழியையும் தேடிச் சென்று திருமணத்திற்கு வருமாறு அழைப்பதே இப்படத்தின் திரைக்கதை.
இதில் கமலா, லத்திகா, திவ்யா, தேன்மொழி பாத்திரங்களில் முறையே மல்லிகா, கோபிகா, சினேகா, கனிகா ஆகியோர் நடித்தனர். ராஜேஷ் – விஜயா சிங் இருவரும் சேரனின் பெற்றோராகத் தோன்றியிருந்தனர்.
‘வெற்றிக்கொடி கட்டு’ படத்தில் இடம்பெற்ற வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சிகள் போன்று இப்படத்தில் எதுவுமில்லை. பாரதிகண்ணம்மா, பொற்காலம் போல மனதைப் பிழியும் சென்டிமெண்ட் காட்சிகள் கிடையாது. அதிரடி சண்டைக்காட்சிகள் இல்லை. கமர்ஷியல் பட திரைக்கதைக்கான இலக்கணத்திற்குள் இதன் திரைக்கதை அடங்காது. இப்படிப் பல ‘இல்லை’கள் இருந்தும், ‘ஆட்டோகிராஃப்’ படத்தில் வரும் பாத்திரங்களின் வார்ப்பும் காட்சிகளும் சாதாரண மனிதர்களில் பெரும்பாலானோரின் வாழ்வனுபவங்களோடு ஒப்பிடத்தக்கதாக இருந்தன.

அந்த வகையில், தியேட்டரில் அமர்ந்திருக்கையிலேயே கடந்தகாலத்தை அசைபோடச் செய்வதாக அமைந்தது ‘ஆட்டோகிராஃப்’ திரைக்கதை. பல ரசிகர்களைக் கண்ணீர் விட்டு அழச் செய்தது.
‘இது ஆண்களின் பார்வையில் இருக்கிறதே’ என்ற குற்றச்சாட்டு எழுந்தபோது, பெண்களுக்கும் இப்படி ‘ஆட்டோகிராஃப்’ கதைகள் உண்டு என்று எதிர்க்குரலை எழச் செய்தது. அதன் வழியே தமிழ், தெலுங்கு, மலையாளத் திரையுலகில் அவ்வாறான உள்ளடக்கத்துடன் சில திரைப்படங்கள் உருவாகக் காரணமானது.
ஆட்டோகிராஃப் மெமரீஸ்
இப்படத்தில் நடிக்கும் வாய்ப்பைத் தவறவிட்டவர்கள் என்று தனி பட்டியலே இடலாம். விஜய், விக்ரம், பிரபுதேவா, ஸ்ரீகாந்த் என்று தமிழ் திரையுலகின் முக்கியமான நடிகர்கள் சிலர் நடிப்பதாக இருந்து ஏதோ சில காரணங்களால் நிகழாமல் போனது. அப்போதிருந்த நடிகர்களில் பலரிடம் இந்தக் கதையைச் சொன்னதாகச் சேரன் சொல்லியிருப்பதால், அந்த பட்டியல் பெரியது என்று அறிய முடியும்.
அதனால், அந்த ‘ஸ்கிரிப்டை’ தானே நாயகனாக நடித்து உருவாக்குவதாக சேரன் முடிவெடுத்ததும், அதனைச் செயல்படுத்தியபோது அவர் பொருளாதாரரீதியாகப் பின்னடைவுகளைச் சந்தித்ததும் இன்னொரு சினிமா எடுக்கும் அளவுக்குச் சுவையான, சுமையான அனுபவங்களை உள்ளடக்கியது. அதனை ஆட்டோகிராஃப் மெமரீஸ்’ என்று தனியாக அவர் தரலாம்.
என்ன சொன்னாலும், வியர்வையும் சோர்வுமாய் ஓடிச் சென்று போட்டியில் வென்று கோப்பையைக் கையிலேந்தியது போன்று ‘ஆட்டோகிராஃப்’ தமிழ் திரை வரலாற்றில் அழிக்க இயலா இடத்தைப் பிடித்தது.
நான்கு பிரிவுகளாக இருக்கும் திரைக்கதையின் தன்மைக்கேற்ப, இப்படத்தில் ரவி வர்மன், விஜய் மில்டன், துவாரகநாத், ஷங்கி மகேந்திரன் என்று நான்கு ஒளிப்பதிவாளர்களைப் பயன்படுத்தினார் இயக்குனர் சேரன். பரத்வாஜ் இப்படத்தில் பாடல்களுக்கு இசையமைத்தார். சபேஷ் முரளி இதற்கு பின்னணி இசை அமைத்தனர்.
வசூல்ரீதியாகவும் விமர்சனரீதியாகவும் இப்படம் பெரிய வெற்றியை ஈட்டியது. பல விருதுகளை வென்றது.
சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாகத் தேசிய விருதினைப் பெற்ற ‘ஆட்டோகிராஃப்’, சிறந்த பின்னணிப் பாடகி மற்றும் பாடல்கள் பிரிவில் பாடகி சித்ராவுக்கும் பாடலாசிரியர் பா.விஜய்க்கும் தேசிய விருதினைப் பெற்றுத் தந்தது.
’ஆட்டோகிராஃப்’ படத்தினைப் பார்க்கும் எந்தவொரு ரசிகருக்கும், கிளைமேக்ஸ் காட்சியில் நாயகிகளை நாயகன் காதலோடு நோக்குவது கேள்வியை எழுப்பும். ‘அந்தக் கணத்திலும் அதே காதலோடு அவர்களை நோக்குகிறாரா’ என்ற எண்ணம் தோன்றும். அதன் முடிவில், காதல் என்ற ஒரு உணர்வு அன்பாகவும் பாசமாகவும் மரியாதையாகவும் உருமாற்றம் அடையும் என்பதைக் கண்டடையச் செய்வதாக, அக்காட்சியின் உள்ளடக்கம் தென்படும். அதுவே இப்படத்தின் வெற்றியைத் தீர்மானித்தது.
நாயகனின் இடத்தில் ஒரு பெண்ணையும், நாயகிகளின் இடத்தில் சில ஆண்களையும் நிறுத்தினால் அந்த உணர்வெழுச்சி மாறாது. அப்படி மாறாமல் இருந்தால்தான், அது கலைப்படைப்பாக இருக்க முடியும். ‘ஆட்டோகிராஃப்’ அத்தகையது என்பதை இந்த ரிரீலிஸில் நாம் தெரிந்துகொள்ள முடியும்.