‘நாலு மாசம் நல்லாத்தான் இருந்தோம்’: டாஸ்மாக் திறப்பும் பெண்களின் கண்ணீரும்!

Published On:

| By Balaji

சென்னையில் இன்று டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது ஒரு பக்கம் மது பிரியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், ‘நாலு மாசமா நல்லாருந்த குடும்பத்தின் மகிழ்ச்சி இன்றோடு முடிந்துவிட்டதாக’ பெண்களின் அழுகுரலும் கேட்கத் தொடங்கிவிட்டது.

சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு காரணமாக டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டன. மே 7ஆம் தேதி தமிழக முழுவதும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டாலும், சென்னையில் திறக்க அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் கடைகளில் இருந்த மது பாட்டில்கள் எல்லாம் மீண்டும் கிடங்குகளுக்கு மாற்றப்பட்டன.

ADVERTISEMENT

தற்போது சென்னையில் பாதிப்பு குறைந்து வரும் நிலையில், டாஸ்மாக் கடைகள் இன்று முதல் திறக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்தது. அதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்றன. கிடங்குகளுக்கு எடுத்துச் செல்லப்பட்ட மதுபான பாட்டில்கள் மீண்டும் கடைகளுக்கு அனுப்பப்பட்டன. மது வாங்க வருபவர்கள் வரிசையாக நிற்பதற்காக டாஸ்மாக் கடைகள் முன்பு கட்டைகள் கட்டி தடுப்புகள் அமைக்கப்பட்டன.

அதோடு சமூக இடைவெளி வட்டங்களும் போடப்பட்டு, ஒரு மணி நேரத்திற்கு 50 டோக்கன் என நாளொன்றுக்கு 500 டோக்கன்கள் மட்டுமே வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

ADVERTISEMENT

இன்று காலை 10 மணிக்கு கடைகள் திறக்கப்படுவதற்கு முன்னதாக, மது வாங்க வருபவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட வேண்டும். டோக்கன், முகக்கவசம் இல்லாமல் வரும் வாடிக்கையாளர்களுக்கு மதுபானங்களை விற்க கூடாது என்று நிபந்தனைகளும் விதிக்கப்பட்டன.

A man does #poojai to the TASMAC shop at Ekkattuthaangal which is getting opened after several months in the chennai city. #liquorshop #tasmac #liqour #Chennai @NewIndianXpress @xpresstn @shibasahu2012 @haisat2005 pic.twitter.com/OijulK12rY

— Ashwin Prasath (@ashwinacharya05) August 18, 2020

அதன்படி, பூசனிக்காய் உடைத்து, பூஜை செய்த பின், இன்று காலை மதுக்கடைகள் திறந்து விற்பனை நடந்து வருகின்றது. இந்நிலையில், டாஸ்மாக் வாசலில் நிற்கும் தங்களது கணவன்களையும், பிள்ளைகளையும் எண்ணி தாய்மார்கள் அழும் குரலும் கேட்கத் தொடங்கியிருக்கிறது.

ADVERTISEMENT

ஈக்காட்டுதாங்கல் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட நிலையில், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் பாதை இயக்கத்தைச் சேர்ந்த பெண்கள் பதாகைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். ‘தடை செய், தடை செய் டாஸ்மாக்கை தடை செய்’, ‘ இழுத்து மூடு இழுத்து மூடு டாஸ்மாக் கடைகளை இழுத்து மூடு’ என்று கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அங்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். இந்த பரபரப்புக்கு மத்தியில், அங்கு ஒரு தாய் டாஸ்மாக் வாசலில் வரிசையில் நின்று கொண்டிருந்த தனது பிள்ளையை நினைத்துப் புலம்பி அழுதுக் கொண்டிருந்ததைக் காண முடிந்தது.

“நாலு மாசமா நல்லாருந்த குடும்பத்துல, டாஸ்மாக்கை திறந்து மீண்டும் மண்ண வாரி போட்டுட்டாங்க. கட திறந்தாலும் குடிக்க போமாட்டேன்மானு சொன்னானே படுபாவி, காலைலயே வந்து நிக்குறானே. நேரத்துக்கு சாப்ட்டுட்டு திருந்தியிருந்த என் புள்ள மீண்டும் இங்க வந்து நிக்குறானே. வருமானமில்லாத காலத்துல, இருக்குற கொஞ்ச நஞ்ச காசும் குடிக்கே போய்டுமே. வேல இல்லாத நிலையில, இவங்க மட்டும் வருமானம் பாக்குறாங்க… ஸ்கூலு, காலேஜூலாம் திறந்தா கொரோனா பரவும்னு சொல்லிட்டு, இப்ப டாஸ்மாக்க திறந்தா கொரோனா பரவாதா… என கதறி அழுவது அவரை கடந்து செல்வோரின் இதயத்தைக் கனக்க செய்தது.

இந்த தாய் மட்டுமல்ல, சென்னையில் திறக்கப்பட்டுள்ள 720 டாஸ்மாக் கடைகளுக்கு முன் நிற்கும் ஒவ்வொரு ‘குடிமகன்களின்’ தாய்மார்களும், மனைவிகளும் இவ்வாறு தான் புலம்பிக்கொண்டிருக்கின்றனர்.

**-கவிபிரியா**,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share