இந்தியாவின் இரண்டாவது தலைநகர்: சென்னையை முன்மொழியும் எம்.பி!

Published On:

| By Balaji

சென்னையை இந்தியாவின் இரண்டாவது தலைநகராக அறிவிக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.

சென்னையில் மக்கள்தொகை பெருகி வருவதால் தமிழகத்துக்கு இரண்டாவது தலைநகரை அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழத் தொடங்கியுள்ளது. தென்மாவட்ட மக்களின் வசதி கருதி மதுரையை இரண்டாவது தலைநகராக்க வேண்டுமென அமைச்சர்கள் உதயகுமார், செல்லூர் ராஜு ஆகியோர் வலியுறுத்தினர். ஆனால், திருச்சியில் உள்ள சாதக அம்சங்களை எடுத்துக்கூறி அங்குதான் இரண்டாவது தலைநகர் அமைய வேண்டுமென மக்களவை உறுப்பினரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான திருநாவுக்கரசர் கோரிக்கை வைத்துள்ளார்.

ADVERTISEMENT

இதெல்லாம் ஒருபுறம் இருக்க இந்தியாவின் இரண்டாவது தலைநகராகச் சென்னையை அறிவித்து, புதிய நாடாளுமன்றத்தை அங்கு அமைக்க வேண்டுமென புதிய குரல் ஒன்று எழுந்துள்ளது.

விழுப்புரம் தொகுதி மக்களவை உறுப்பினரும், விசிகவின் பொதுச் செயலாளருமான ரவிக்குமார் நேற்று (ஆகஸ்ட் 18) தனது முகநூல் பக்கத்தில், மத்தியில் ஆளும் பாஜக அரசு புதிய நாடாளுமன்றம் கட்டுவதில் முனைப்பாக இருக்கிறது. ஏற்கனவே நாடாளுமன்றத்துக்கென சிறப்பு வாய்ந்த கட்டடம் இருக்கும்போது புதிதாகக் கட்ட வேண்டிய தேவை இல்லை என்று பலரும் கூறிய பின்னரும் அவர்கள் கேட்பதாக இல்லை என்று கூறியுள்ளார்.

ADVERTISEMENT

மேலும், “இந்தியாவில் இரண்டாவதாக ஒரு நாடாளுமன்றம் கட்ட வேண்டும் என்றால் அதை சென்னையில் கட்டுங்கள். குளிர்காலக் கூட்டத்தொடரை சென்னையில் நடத்துங்கள். வடமாநிலங்களைச் சேர்ந்த எம்.பி.க்கள் தென்னிந்தியப் பண்பாட்டை,வளர்ச்சியை நேரில் பார்த்து தமது மாநிலமும் இப்படி முன்னேற வேண்டும் என்ற உணர்வைப் பெறட்டும் என்றும் வலியுறுத்தியுள்ள ரவிக்குமார், இந்தியாவின் இரண்டாவது தலைநகராகச் சென்னையை அறிவியுங்கள். அதிகாரப் பரவலாக்கத்துக்கு அது அடையாளமாகத் திகழும் என்றும் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

ஏற்கனவே உச்ச நீதிமன்றக் கிளையைத் தமிழ்நாட்டில் அமைக்க வேண்டுமென மதிமுக பொதுச் செயலாளர் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார். நடைமுறைக்கு சாத்தியமா என்ற கேள்வி ஒருபுறம் இருந்தாலும், மக்களவை உறுப்பினர் ரவிக்குமாரின் இந்த கோரிக்கை முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

**எழில்**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share