சென்னையில் 20 செ.மீ மழை பெய்தாலும் 1 மணி நேரத்தில் நீரை அகற்றுவதற்கான அனைத்து பணிகளும் தயார் நிலையில் இருக்கின்றன என்று நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை முதல் சென்னை உட்பட ஏராளமான மாவட்டங்களில் மழை கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் இன்று (நவம்பர் 4) சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையை அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு, மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, “கடந்த 3 நாட்களில் 11 செ.மீ மழை பெய்தும் கூட 1 மணி நேரத்தில் அனைத்து இடங்களிலும் தண்ணீர் வடிந்துவிட்டது. அந்த அளவிற்கு களப்பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. 98 சதவீதம் பணிகள் நிறைவடைந்துவிட்டன. இன்னும் 2 சதவீத பணிகள் தான் மீதமிருக்கின்றன.
எந்த இடத்திலும் தண்ணீர் தேங்காத அளவிற்கு அனைத்து அதிகாரிகளும் கவனித்து வருகிறார்கள். நேற்று ஆலந்தூரில் மட்டும் தொடர்ந்து அரை மணி நேரத்திற்கு 9 செ.மீ. மழை பெய்துள்ளது. இது போன்ற நேரங்களில் தான் தண்ணீர் அதிகமாக தேங்குகிறது. ஆனால் 1 மணி நேரத்தில் தண்ணீர் வடிந்துவிட்டது.
இதை விட கூடுதலாக, 20 செ.மீ மழை பெய்தால் கூட 1 மணி நேரத்தில் தேங்கியிருக்கும் மழை நீரை அகற்றுவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.
பாதிப்பு அதிகரிக்கும் போது மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்கவைப்பது, மரக்கிளைகள் முறிந்து விழுந்தால் அதனை அகற்றுவது, தண்ணீர் தேங்கினால் அதனை அகற்றுவதற்கு மோட்டார் பம்புகள் என அனைத்தும் தயாராக இருக்கின்றது.
மழை நீர் தேங்கினால் அகற்றுவதற்காக மொத்தம் 29 ஆயிரம் களப்பணியாளர்கள் தயார் நிலையில் இருக்கிறார்கள். மழை நீர் மற்றும் கழிவு நீர் கலக்காமல் இருக்க ஏற்கனவே சென்னை மெட்ரோ குடிநீர் வாரியம் சார்பில் 1000 கோடி ரூபாய் செலவில் எந்த இடங்களில் எல்லாம் பழுது ஏற்பட்டிருக்கிறதோ, அங்கெல்லாம் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
தற்போது மழைக்காலத்தில் பள்ளம் தோண்டினால் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதற்காக 2 மாதங்களாக பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது.
சென்னைக்கு குடிநீரை பொறுத்தவரை ஒரு நாளைக்கு 1,500 லாரிகள் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. தேவைப்பட்டால் கூடுதலாகவும் தண்ணீர் வழங்கப்படும்.
தற்போது எப்போதும் இல்லாத அளவிற்கு குடிநீரை தயார் செய்து வைத்துள்ளோம். கூடுதலாக கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை ஆரம்பிக்க உள்ளோம். தொடர்ந்து சென்னையை சுற்றியுள்ள ஏரிகளை சுத்தப்படுத்தி, ஆழப்படுத்தி, அகலப்படுத்தும் பணிகளை தற்போது தொடங்கியுள்ளோம். எனவே சென்னையை பொறுத்தவரை குடிநீர் பிரச்சனை இல்லை” என்று தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா