சென்னையில் நேற்று முதல் பெய்து வரும் கன மழையால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் மற்றும் ஜிஎஸ்டி சாலையில் மழைநீரால் பெருமளவில் தண்ணீர் தேங்கியுள்ளது.
வட தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, சென்னை மற்றும் புறநகர் பகுதியில் நேற்று மாலை கருமேகங்கள் திரண்டு திடீரென பலத்த மழை கொட்டியது.
பின்னர் விட்டு விட்டு நீடித்த மழை விடிய விடிய பலத்த மழையாக கொட்டித் தீர்த்தது. இதேபோல் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்தது.
இதன் காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
இதற்கிடையே சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை (ஆகஸ்ட் 15) ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது” என்று தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில் இன்று பிற்பகலில் சென்னை கிண்டி, ஆலப்பாக்கம், மீனம்பாக்கம், குரோம்பேட்டை, பெருங்களத்தூர், வண்டலூர், கிளாம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
குறிப்பாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் மற்றும் ஜிஎஸ்டி சாலையில் தேங்கி நிற்கும் மழைநீரால் கடுமையாக போக்குவரத்து கடந்த 4 மணி நேரமாக பாதிக்கப்பட்டு வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
திறக்கவிருக்கும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் முன் இருக்கும் தேசிய நெடுஞ்சாலையின் அவல நிலை!@CMOTamilnadu @PKSekarbabu @mkstalin pic.twitter.com/g1gvWXJ5HS
— அஸ்வின் (@aswin_sankar_) August 14, 2023
மேலும் இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருவதால் சென்னையில் விமான சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.
திருச்சி, மைசூர், கொச்சி, வாரணாசி, பாட்னா போன்ற இடங்களில் இருந்து வந்த ஐந்து விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த வண்ணம் இருந்தன. சென்னையில் இருந்து ஐதராபாத், டெல்லி, மதுரை, கவுகாத்தி உள்ளிட்ட எட்டு இடங்களுக்கு புறப்பட வேண்டிய விமானங்கள் தாமதமாகவே புறப்பட்டு சென்றன.
அதே வேளையில் திருநெல்வேலி, தூத்துக்குடி, கரூர், திருச்சி தஞ்சாவூர், வேலூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் வெயில் அதிகரித்து காணப்பட்டது.
குறிப்பாக நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் அதிகபட்சமாக 39.9 டிகிரி செல்சியஸ் வெயில் கொளுத்தியுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
தந்தை, மகன் தற்கொலை… குடியரசுத்தலைவருக்கு முதல்வர் கடிதம்!
ஏமாற்றி அடிமையாக்கும் ஆன்லைன் விளையாட்டுகள்: உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு