சென்னையில் மழை : வானிலை அப்டேட்!

Published On:

| By admin

சென்னையில் கடந்த இரு நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான நிலை நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகத் தமிழகத்தில் பரவலாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாகச் சென்னையில் நேற்று முன் தினம் இரவு முதல் மழை பெய்து வருகிறது.

போரூர், குன்றத்தூர், மவுலிவாக்கம், கொரட்டூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளிலும், பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர் என புறநகர்ப் பகுதிகளிலும், தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, கிண்டி , வேளச்சேரி பகுதிகளிலும் மழை பெய்தது. இதனால் சாலைகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். எனினும் வெக்கை தணிந்து குளிர்ந்த நிலை நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இன்று மாலை மீண்டும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் மழை அடுத்த மூன்று தினங்களுக்குத் தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு , கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஜூன் 23ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை தமிழ்நாடு புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான / கனமழை பெய்யக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் ரெட்ஹில்ஸ், திருவாலங்காடு, அரக்கோணம், வில்லிவாக்கம் ஆகிய இடங்களில் அதிக மழை பெய்து உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

**-பிரியா**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share