நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர்… சென்னை போலீஸ் வார்னிங்!

Published On:

| By Selvam

வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டுபவர்கள் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை எச்சரித்துள்ளது.

இதுகுறித்து பெருநகர சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

“தனியார் வாகனங்களின் வாகன எண் தகட்டில் ஸ்டிக்கர்கள் அல்லது வேறு ஏதேனும் சின்னங்கள்/குறிகள் வடிவில் தங்களது துறை அடையாளங்களை வெளிப்படுத்துவது, தனிநபர்களுக்கு மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளுக்கும் பரவலான எதிர்மறை தாக்கங்களை ஏற்படுத்தலாம்.

பெரும்பாலும், சென்னை பெருநகரில் உள்ள தனியார் வாகனங்களில் பத்திரிகை, தலைமைச் செயலகம், டிஎன்இபி, ஜிசிசி, காவல் துறை உட்பட முப்படை போன்ற துறைகள்/நிறுவனங்களின் பெயர்களைக் காணலாம்.

இது போன்ற ஸ்டிக்கர்கள் வாகன எண் தகட்டிலும், வேறு பகுதியிலும் காணப்படும். இத்தகைய அரசாங்கத் தொடர்புடைய சின்னங்கள்/எழுத்துக்களை தனியார் வாகனங்களில் வெளிப்படுத்துவது அதன் இயக்கம் மற்றும் பாதுகாப்பை சமரசம் செய்கிறது.

கூடுதலாக, குற்றம் சாட்டப்பட்டவர்களும் வாகனத்தில் இத்தகைய ஸ்டிக்கர்களை தவறாக பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் காவல்துறையின் கடுமையான நடவடிக்கைகளில் இருந்து தப்பித்து வருகிறார்கள்.

இது தவிர, பல தனியார் வாகனங்களில் ஒரு சில அரசியல் கட்சியை சித்தரிக்கும் சின்னங்கள், மருத்துவர் அல்லது வக்கீல் என வெளிப்படுத்துவதும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த உண்மையின் தீவிரத்தன்மையைக் கருத்தில் கொண்டு, சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல்துறை இந்த நடைமுறைகளுக்கு எதிராக சாலையைப் பயன்படுத்துபவர்களை எச்சரித்தும், இம்முரண்பாட்டினை தங்களது வாகனத்தில் சரிசெய்ய 01.05.2024 வரை கால அவகாசம் வழங்கப்படுகிறது.

மேலும் இவ்விதி மீறலில் ஈடுபடுபவர்கள் மீது வருகின்ற 02.05.2024 முதல், MV சட்டம் 1988-ன் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் மற்றும் (மோட்டார் வாகனத்தில் அங்கீகரிக்கப்படாத குறுயீடு) பிரிவு 198-ன் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்படும் மற்றும் வாகன எண் தகட்டில் ஏதேனும் அங்கீகரிக்கப்படாத ஸ்டிக்கர்களை பயன்படுத்தினால் MV விதி 50 u/s 177-ன் கீழ் அபராதம் விதிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

உலக செஸ் சாம்பியன்ஷிப் எப்போது தொடக்கம்?

ஆம் ஆத்மி கூட்டணிக்கு எதிர்ப்பு: டெல்லி காங்கிரஸ் தலைவர் ராஜினாமா!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share