மயிலாப்பூர் கபாலீஸ்வரர் தேரோட்டம் இன்று (ஏப்ரல் 3) வெகு விமரிசையாக நடைபெற்றது.
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி பெருவிழா ஆண்டுதோறும் மிக விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதில், முக்கிய நிகழ்வான தேரோட்டத்தின்போதும் வீதிகளில் உலா வரும் தேரினைக் காண லட்சக்கணக்கான பொதுமக்கள் பல்வேறு ஊர்களில் இருந்து வருவார்கள்.
ஆனால் கடந்த மூன்று வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால் மயிலாப்பூர் தேரோட்டத்திற்கு வரும் மக்களின் வருகை குறைந்தது.
இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால் மக்கள் வெள்ளத்தில் மிதந்தது மயிலாப்பூர் தேரோட்டம்.
இந்த ஆண்டுக்கான பங்குனி மாத திருவிழா கபாலீஸ்வரர் கோயிலில் கடந்த மாதம் 28 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று சிறப்பாக நடைபெற்றது.
4 மாடவீதிகளில் பவனி வந்த தேரை காண்பதற்காக பக்தர்கள் குவிந்தனர். கற்பகாம்பாளுடன் தேரில் எழுந்தருளிய கபாலீஸ்வரரை பக்தர்கள் வணங்கியதோடு, தேரை பக்தி பரவசத்துடன் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
தேரோட்டம் காரணமாக, மயிலாப்பூர் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. மேலும் இன்று பக்தர்களின் பாதுகாப்புக்காக அதிகளவில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.
தொடர்ந்து நாளை (ஏப்ரல் 4) அறுபத்து மூவர் வீதியுலா நடைபெறும். எட்டாம் நாள் விழாவாக நடைபெறும் அறுபத்து மூவர் விழா உலகப்புகழ் பெற்றது. அன்று நடைபெறும் பூம்பாவையை உயிர்ப்பித்த நிகழ்ச்சி விழாவும் மிகவும் புகழ்பெற்றது.
அன்றைய தினம் மாலையில் வெள்ளி விமானத்தில் இறைவன் அறுபத்து மூன்று நாயன்மார்களோடு வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார். இரவு ஐந்திரு மேனிகள் விழாவும் ஏப்ரல் 6 ஆம் தேதி திருக்கல்யாண வைபவமும் நடைபெறவுள்ளது.
மோனிஷா
