சோழிங்கநல்லூரில் இருந்து சிறுசேரி வரை தடைபட்டிருந்த, மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் எப்போது தொடங்கும் என்பது குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. 2nd Phase Metro Rail Work
சென்னையின் போக்குவரத்து நெரிசலை குறைப்பதில் மெட்ரோ ரயில்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதனால் விரைவான மற்றும் வசதியான பயணத்திற்கு பொதுமக்கள் அதிகளவில் மெட்ரோ ரயில்களை பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.
இதற்கிடையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் தற்போது சென்னையின் முக்கிய தடங்களில் மெட்ரோ ரயில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டமானது 116.1 கி.மீ தொலைவில் மூன்று வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது.
இவற்றில் ஒன்று மாதவரம் – சிறுசேரி சிப்காட் வரை 45.4 கி .மீ தொலைவைக்கொண்ட 3 – வது வழித்தடம். இந்த வழித்தடத்தில் மாதவரம் பால்பண்ணை, பசுமை வழிச்சாலை, சேத்துப்பட்டு உள்ளிட்ட இடங்களில் சுரங்கப் பாதை பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இது போல் பல இடங்களில் மெட்ரோ ரயில் பாதைகள் மற்றும் ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெறுகின்றன.
இதற்கிடையே ஓ.எம்.ஆர் சாலையில் நேரு நகர் முதல் சிப்காட் வரை உயர்மட்ட பாதை பணிகள் கடந்த ஆண்டு தொடங்கின.
இவற்றில் சோழிங்கநல்லூர் சிறுசேரி வரை 10 கி.மீ தொலைவிற்கு உயர்மட்ட பாதைக்கான பூர்வாங்க பணிகள் நிறைவடைந்து, அடுத்தகட்ட பணிக்கான சாலை தடுப்புகள் அமைக்கப்பட்டு வந்தன.
சோழிங்கநல்லூர் சிறுசேரி சிப்காட் இடையெ 9 மெட்ரோ ரயில் நிலையங்களை அமைப்பதற்கான ஒப்பந்தம் ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் நிறுவனத்திற்கு கடந்த ஆண்டு ஏப்ரலில் வழங்கப்பட்டது.
இந்த நிறுவனம் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள துணை ஒப்பந்ததாரர்கள் அவர்கள் பணியை தொடங்காததால் திட்டப்பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் தற்போது விரைவில் 2-ம் கட்ட மெட்ரோ பணிகள் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிலைய அதிகாரிகள்,
” கட்டுமான பணியினை மேற்கொள்ள ஒரு புதிய நிறுவனத்தை கண்டறிந்துள்ளோம். கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கும். இந்த தடத்தில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணி குறிப்பிட்ட காலத்தில் முடிக்கப்படும்,” என்றனர். 2nd Phase Metro Rail Work
-கவின்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…