“ஒவ்வொரு ஆண்டும் இப்படிதான்” : வெள்ளத்தில் தத்தளித்த சென்னை – காரணம் என்ன?

Published On:

| By Kavi

வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த 4 ஆம் தேதி அடைமழை பெய்தது. இதனால் சென்னை மாநகரின் பல பகுதிகளும் வெள்ளத்தில் தத்தளித்தன.

பேருந்துகள் செல்லும் சாலைகளில் படகுகள் பயணித்தன, தாய்க்கும் சேய்க்கும் பால் வாங்க முடியாமல் பலர் தவித்து போனார்கள். சொந்த வீடுகளை விட்டு மக்கள் வெளியேறும் நிலை ஏற்பட்டது. மழை விட்டும் ஒரு வாரமாக பல இடங்களில் தண்ணீர் வடியவில்லை.

ADVERTISEMENT

மழை வெள்ளத்தால் சென்னை தண்ணீரில் மிதந்ததால் மாநகர சாலைகளிலும் வீதிகளிலும் இருந்த இரண்டு லட்சத்து 86 ஆயிரத்து 558 மின் விளக்குகளும் அணைந்து போனது. வீடுகள், அலுவலகங்களில் மின் இணைப்பு இல்லாமல் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சென்னை இருளில் மூழ்கியது. ஐந்து நாட்கள் கடந்தும் முழுமையாக மின் இணைப்புகள் வரவில்லை.

சென்னை மாநகரத்தில் 16 ரயில்வே சுரங்கப்பாதையிலும், ஐந்து பாதசாரிகள் சுரங்க பாதைகளிலும் தேங்கியுள்ள தண்ணீரை எடுக்க மாநகராட்சி ஊழியர்கள் போராடினர். சாலைகளில் மழை நீரோடு, சாக்கடை நீரும் கலந்து சென்றன.

ADVERTISEMENT

இப்படி, சென்னையில் பாதிப்பு ஏற்பட்டதற்கு காரணம் என்னவென்று மாநகராட்சி அதிகாரிகள், பொறியாளர்களிடம் விசாரித்தோம்.

பெயர் குறிப்பிட விரும்பாத சில அதிகாரிகள் நம்மிடம் கூறுகையில், “சென்னை மாநகரத்தில் உள்ள 200 வார்டுகளில் சுமார் ஒரு கோடி மக்கள் வாழ்கின்றனர்.  40.57 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். 12 லட்சம் குடியிருப்புகள், சுமார் 20 லட்சம் குடும்பங்கள் உள்ளன.

ADVERTISEMENT

இந்த தொடர் மழையால் 387 கிலோமீட்டர் தூரமுள்ள 471 பேருந்து சாலைகளும், 5,270 கிலோமீட்டர் தூரமுள்ள 34,640 உட்புற சாலைகளும் வெள்ளமாக காட்சியளித்தன.

கூவம் ஆறு உட்பட 30 நீர் வழி கால்வாய்கள், 706 கிலோ மீட்டர் நீளம் உள்ள 4,422 வடிகால் வாய்க்கால்களை சரியாக வைத்திருந்தால் இந்த அளவிற்கு மழை தண்ணீர் தேங்கி இருக்காது. ஒவ்வொரு முறை மழை வரும்போது அவசர தேவை என்று பலமடங்கு செலவு செய்து, ஜேசிபி, புல்டோசர்கள் ஆகிவற்றை வாடகைக்கு எடுத்து வந்து, பல கோடி செலவுகள் செய்து கட்டப்பட்டிருக்கும் வடிகால் வாய்க்கால்களையும் உடைத்து விடுகிறார்கள்.

மழைகாலம் முடிந்து வெயில் காலம் வந்ததும் வடிகால் வாய்க்கால்களை அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் மறந்து விடுவார்கள். பின்னர் மழை காலம் நெருங்கும் போது ஆறுகள், வாய்க்கால்களை தூர்வாரவும், சீர்திருத்தம் செய்யவும், வடிகால் வாய்க்கால்களை கட்டவும் டெண்டர் விடுவார்கள்,

ஒப்பந்ததாரர்கள் 25% கமிஷன் கொடுத்து டெண்டர் எடுப்பார்கள். தொடர்ந்து உள்ளூர் கட்சியினர் உள்ளிட்டோருக்கு கமிஷன் கொடுத்துவிட்டு தரம் இல்லாமல் கட்டுமான பணிகளை செய்துவிட்டு பில் வாங்கிக்கொண்டு சென்றுவிடுவார்கள்.

இதனால், அடுத்த மழைக்குள் கட்டிய கால்வாய்கள் பல காணமல் போய்விடும். இப்படித்தான் ஒவ்வொரு வருடமும் நடந்து வருகிறது.

இனி வருங்காலத்தில் சென்னையை காப்பாற்ற வேண்டும் என்றால் தற்போது சேதமடைந்துள்ள கால்வாய்கள் புதிதாக கட்டுவதற்கும், பழைய கால்வாய்களை புதுப்பிக்கவும், பெரிய வாய்க்கால்களை விரிவுப்படுத்தி பலப்படுத்தும் வேலைகளிலும் கமிஷன் ஊழல் இல்லாமல் செய்தால் அடுத்த ஆண்டு மழையில் சென்னையைக் காப்பாற்றலாம்” என்றார்கள் மாநகர பொறியாளர்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

-வணங்காமுடி

சலார் ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்போது?

ஆதாருடன் பான் எண் இணைப்பு : சரிபார்ப்பது எப்படி?

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share