தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து தியோசோபிகல் சொசைட்டி தொடர்ந்த மேல் முறையீட்டு மனு, சென்னை உயர்நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
உலக சகோதரத்துவத்தை நோக்கமாக கொண்டு தியோசோபிகல் சொசைட்டி சென்னை அடையாறில் 1882-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
27 ஏக்கரில் துவங்கப்பட்ட இந்த தியோசோபிகல் சொசைட்டி தற்போது 270 ஏக்கர்களுக்கும் மேல் விரிவடைந்துள்ளது. சென்னையின் பெருமைகளில் ஒன்றான 450 ஆண்டுகள் பழமை வாய்ந்த அடையாறு ஆலமரம் இந்த வளாகத்தில் தான் இருந்தது.
இந்த நிலையில் அடையாறில் உள்ள தியோசோபிகல் சொசைட்டிக்கு சொந்தமான இடத்தை ஆய்வு செய்யவும், அதில் அரசுக்கு சொந்தமான நிலம் இருந்தால் மீட்கவும் உத்தரவிட்ட தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து தியோசோபிகல் சொசைட்டி தொடர்ந்த மேல் முறையீட்டு மனு சென்னை உயர்நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 31-ம் தேதி தியோசோபிகல் சொசைட்டியின் வசமுள்ள அனைத்து நிலங்களையும் நகரத்தின் முந்தைய நில அளவை வரைபடத்துடன் ஒப்பிட்டு பார்த்து, உடனடியாக அந்த வளாகத்தில் உள்ள அரசு நிலத்தை மீட்டெடுக்க வேண்டும் என வேளச்சேரி தாசில்தாருக்கு, மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு பிறப்பித்து இருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து தியோசோபிகல் சொசைட்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
வழக்கை விசாரித்த தனி நீதிபதி மாவட்ட வருவாய் அலுவலரின் உத்தரவை ரத்து செய்து ஆவணங்களை சமர்ப்பிக்க சங்கத்துக்கு வாய்ப்பளிக்குமாறு அவருக்கு உத்தரவு பிறப்பித்தார்.
இந்த நிலையில் ஒரு நிலத்தின் உரிமை பிரச்சினையை மாவட்ட வருவாய் அலுவலரால் தீர்மானிக்க முடியாது என, தியோசோபிகல் சொசைட்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.
அதில், ”நகர கணக்கெடுப்பின்படி தியோசோபிகல் சொசைட்டியின் பெயர் அடங்கல் வரிசையில் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது என மாவட்ட ஆட்சியர் கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி 31-ம் தேதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஆட்சியரின் உத்தரவை மீறி மாவட்ட வருவாய் அலுவலரால் செயல்பட முடியாது,” என தெரிவித்திருந்தது.
இந்த மேல்முறையீட்டு மனு சென்னை உயர்நீதிமன்றத்தின் முதல் அமர்வு தலைமை நீதிபதிகள் சஞ்சய் விஜயகுமார் கங்கபூர்வாலா மற்றும் பாரத சக்ரவர்த்தி அமர்வின் கீழ் நேற்று முன்தினம் வியாழக்கிழமை (டிசம்பர் 7) விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள் அமர்வு , ”சங்கத்தின் மேல்முறையீட்டு மனுவை ஏற்க நாங்கள் விரும்பவில்லை. நிலத்தின் மீதான உரிமை குறித்த அனைத்து ஆவணங்களுடன் மாவட்ட வருவாய் அலுவலரை அணுகுங்கள் ” என உத்தரவிட்டுள்ளது.
இந்த தியோசோபிகல் சொசைட்டி வனத்தில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி ஐஏஎஸ், ஐபிஎஸ் என உயர்மட்ட அதிகாரிகள் பலரும் தினசரி நடைபயிற்சி செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
–மஞ்சுளா
பலமான பெங்கால் வாரியர்சை வீழ்த்தி… வெற்றியை தக்க வைக்குமா தமிழ் தலைவாஸ்?
சென்னை வெள்ளம்: விசாரணை நடத்த மத்திய இணை அமைச்சர் வலியுறுத்தல்!
