சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி அவரது தாயார் தொடர்ந்த ஆட்கொணர்வு வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் இன்று (மே 24) மாறுபட்ட தீர்ப்பு வழங்கியுள்ளனர்.
பெண் காவலர்களை இழிவாக பேசிய விவகாரத்தில் யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது கஞ்சா வழக்கு உட்பட மொத்தம் 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க, சென்னை மாநகர காவல் ஆணையர் கடந்த மே 12ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தார்.
இந்நிலையில் சங்கர் மீதான குண்டாஸை ரத்து செய்து தனது மகனை விடுவிக்க வேண்டும் என்று அவரது தாயார் கமலா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். தேசிய மனித உரிமைகள் ஆணையம் (என்எச்ஆர்சி) விசாரிக்கக் கோரியும் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுக்கள் நேற்று கோடைக்கால விடுமுறை சிறப்பு அமர்வான ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் பி.பி.பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, பெண் காவலர்களை இழிவாக பேசியது குறித்து நீதிபதிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், “சமூக ஊடகங்களில் சங்கரின் நடத்தை நல்லவிதமாக இல்லை. பல சந்தர்ப்பங்களில் அவர் எல்லை மீறியது தெரியவருகிறது. பெண்களின் கண்ணியம் முதன்மையானது. அவர் அந்த எல்லையை மீறியிருக்கிறார். ஒரு முதலமைச்சர் என்று கூட பார்க்காமல் ஒருமையில் பேசியிருக்கிறார்” என்று தெரிவித்தனர்.
நேற்று மதியம் நடந்த இந்த வழக்கு விசாரணையின் போது, சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையிலடைத்து பிறப்பித்த உத்தரவு தொடர்பான அசல் ஆவணங்கள் காவல்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்டது.
அதை ஆய்வு செய்த நீதிபதிகள், ”எதிர்காலத்தில் எப்படி நடந்து கொள்வார்… என்னவெல்லாம் செய்ய மாட்டார் என பட்டியலிட்டு தெரிவிக்க வேண்டும், சவுக்கு சங்கர் உத்தரவாத மனு தாக்கல் செய்ய வேண்டும்’” என உத்தரவிட்டனர். இறுதி விசாரணையை மே 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர் .
அதன்படி இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் குண்டாஸை ரத்து செய்ய கோரிய வழக்கில் இன்றே இறுதி விசாரணை செய்யப்படும் என்று தெரிவித்தார்.
நீதிபதி பிபி.பாலாஜி பதில் மனு தாக்கல் செய்ய காவல்துறைக்கு அவகாசம் அளிக்க வேண்டும். அதனால் இன்றே இறுதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை என்று கூறினார்.
தொடர்ந்து இன்று மதியம் சவுக்கு சங்கரின் தாயார் கமலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனு வழக்கில் நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.பி.பாலாஜி அமர்வு மாறுபட்ட தீர்ப்பு வழங்கினர்.
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், “இந்த மனுவை இறுதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று அதிகாரம் மிக்க நபர்கள் இந்த வழக்கு தொடர்பாக என்னை சந்தித்தனர். . இதன் காரணமாகவே இந்த வழக்கை அவசரமாக விசாரித்தேன். சவுக்கு சங்கர் வழக்கில் முறையான விதிகள் பின்பற்றாமல் குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. எனவே சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்படுகிறது” என்று தீர்ப்பளித்தார்.
நீதிபதி பாலாஜி, “இந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசு பதிலளித்தற்குப் பிறகு வழக்கை விசாரிக்கலாம்” என்று உத்தரவிட்டார். இரண்டு நீதிபதிகளும் சவுக்கு சங்கரை கோவை மத்திய சிறையில் இருந்து புழல் சிறைக்கு மாற்ற உத்தரவிட்டனர்.
இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளதால், இந்த வழக்கை மூன்றாவதாக தனி நீதிபதி அமர்வுக்கு மாற்ற பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் பரிந்துரை செய்ய உள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா, செல்வம்
சவுக்கு சங்கரின் குண்டர் சட்ட வழக்கு: மாறுபட்ட தீர்ப்பு?
பாஜக நாம் தமிழரை விட அதிக வாக்கு வாங்கினால் கட்சியை கலைத்து விடுகிறேன் – சீமான் சவால்
Comments are closed.