முதல்வர் வாகனத்திலேயே சோதனை… பணப்பட்டுவாடாவுக்கு எதிரான வழக்கில் அரசு வாதம் – கோர்ட்டு உத்தரவு!

Published On:

| By Kavi

தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுகள் விநியோகிப்பதை தடுக்க கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 

2026 சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ADVERTISEMENT

இந்த நிலையில், மதுரையைச் சேர்ந்த கேகே ரமேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். 

அதில், கடந்த காலங்களில் பணப்பட்டுவாடா காரணமாக சில தொகுதிகளில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றன. 

ADVERTISEMENT

வாக்குக்கு பணம் கொடுப்பதும் வாங்குவதும் குற்றமாகும். பண பட்டுவாடாவை தடுக்க கூடுதல் பறக்கும் படைகளை நியமிக்க வேண்டும். 

பொதுமக்கள் புகார் அளிக்கும் வகையில் தொடர்பு எண்களை வெளியிட வேண்டும்.  பண பட்டுவாடா காரணமாக தேர்தல் தள்ளி வைக்கப்பட்டாலோ அல்லது ரத்து செய்யப்பட்டாலோ தேர்தல் ஆணையம் செய்த செலவை சம்பந்தப்பட்ட வேட்பாளர் அல்லது கட்சியின் தலைவரிடம் இருந்து வசூலிக்க உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

ADVERTISEMENT

இந்த வழக்கு தலைமை நீதிபதி தர்மாதிகாரி மற்றும் நீதிபதி அருள்முருகன் அமர்வில் இன்று (ஏப்ரல் 1) விசாரணைக்கு வந்தது. 

அப்போது அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி எஸ் ராமன், ‘முதலமைச்சரின் வாகனத்தையே பறக்கும் படையினர் சோதனை செய்துள்ளனர். பண பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மாநில அரசு வழங்கி வருகிறது’ என்று வாதம் முன்வைத்தார். 

தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபாலன், ‘பண பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. 2,169 பறக்கும் படைகளும், 2166 கண்காணிப்பு குழுக்களும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்’ என்று கூறினார். 

இந்த வாதங்களை ஏற்ற நீதிபதிகள், பண பட்டுவாடாவை தடுக்க கோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தனர். 

முன்னதாக 2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளுக்கான வாக்குப்பதிவை தேர்தல் ஆணையம் ஒத்திவைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share