டாஸ்மாக் சோதனைக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கு இன்று (மார்ச் 20) விசாரணைக்கு வந்த நிலையில் அமலாக்கதுறையின் நடவடிக்கையை உயர்நீதிமன்றம் கண்டித்துள்ளது. chennai hc warned ed on tasmac raid
தமிழ்நாட்டில் டாஸ்மாக் தலைமை அலுவலகம் உட்பட அது தொடர்புடைய பல்வேறு இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த 6ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை சோதனை நடத்தினர்.
மூன்று நாட்களாக சுமார் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் நடத்தப்பட்ட சோதனையின் முடிவில் டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோடி வரை முறைகேடுகள் நடந்திருப்பதாக அமலாக்கத் துறை கடந்த 13ஆம் தேதி அறிக்கை வெளியிட்டது.
தமிழக அரசு மனு தாக்கல்! chennai hc warned ed on tasmac raid
அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கைகளுக்கு தடைக்கோரி டாஸ்மாக் நிறுவனம் தரப்பில் தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்தது.
அதில், “தமிழக அரசின் அனுமதியின்றி டாஸ்மாக் விவகாரம் தொடர்பாக சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தில் நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும். விசாரணை என்ற பெயரில் டாஸ்மாக் நிறுவன அதிகாரிகளையோ அல்லது ஊழியர்களையோ துன்புறுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும். கடந்த மார்ச் 6 முதல் 8-ம் தேதி வரை நடைபெற்ற அமலாக்கத் துறையின் சோதனையையும், ஆவணங்கள் பறிமுதல் செய்ததையும் சட்டவிரோதம் என அறிவி்க்க வேண்டும்” என அதில் கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் செந்தில்குமார் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
முன் அனுமதி பெறவில்லை! chennai hc warned ed on tasmac raid
அப்போது தமிழக தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விக்ரம் சவுத்ரி, “டாஸ்மாக் என்பது பொதுத்துறை நிறுவனம் என்பதால் இயக்குநரின் ஒப்புதல் இல்லாமல் நுழைய முடியாது. பிஎம்எல்ஏ சட்டவிதிப்படி மாநில அரசின் உரிய அனுமதி பெறாமல், அமலாக்கத்துறை சோதனை நடத்த முடியாது. சோதனை நடத்துவதாக இருந்தால் அதற்குரிய காரணங்களை எழுத்துப்பூர்வமாக தெரிவித்து முன் அனுமதி பெற வேண்டும்.
அனைவரையும் சிறைபிடித்தனர்! chennai hc warned ed on tasmac raid
முன்னதாக சட்டவிரோதமான மணல் கடத்தல் என அமலாக்கத்துறை சோதனை நடத்தியது போலவே, டாஸ்மாக் முறைகேடு என்ற நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டின் பேரில் தற்போதும் சட்ட விதிகளை மீறி செயல்பட்டுள்ளது. மூன்று நாட்களும் காவலாளிகள் உட்பட டாஸ்மாக் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை 3 நாட்களுக்கு அமலாக்கத்துறை சிறைபிடித்தது. குறிப்பாக பெண் ஊழியர்களை நடு இரவில் வீட்டுக்கு அனுப்பி, காலையில் சீக்கிரம் வர வேண்டும் என மன உளைச்சலுக்கு உள்ளாக்கினர். மாநில அரசின் டாஸ்மாக் வழக்குகளில் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு எந்த அதிகாரமும் இல்லை. இது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது” என வாதிட்டார்.
குற்றச்சாட்டை மறுத்த அமலாக்கத்துறை
இதனைக் கேட்ட நீதிபதிகள், ”தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில், அமலாக்கத்துறையின் நடவடிக்கைகள் எதையும் குறிப்பிடவில்லை. மாநில அரசின் அனுமது பெற்றுத்தான் ஒரு மாநிலத்தில் அமலாக்கத்துறை விசாரணை நடத்த வேண்டுமா? இரவு நேரத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது ஏன்?” என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
தொடர்ந்து அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், “நாங்கள் யாரையும் துன்புறுத்தவில்லை. யாரையும் சிறைபிடிக்கவில்லை. இரவில் நாங்கள் சோதனை நடத்தவில்லை. பல்வேறு முறைகேடுகள் நடைபெற்ற காரணத்தால் மட்டுமே சோதனையில் ஈடுபட்டோம். ” என்று பதில் தெரிவித்தனர்.
பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், “இரவு நேரத்திலும் சோதனை நடைபெற்றது செய்திகள் மூலமாக உறுதியாகியுள்ளது. ஒரு சில அதிகாரிகள் மனு தாக்கல் செய்தியிருந்தால் பரவாயில்லை, டாஸ்மாக் நிறுவனமே மனு தாக்கல் செய்துள்ளது. இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை பொய் சொல்ல வேண்டாம். உங்கள் அதிகாரத்தை நீங்கள் செயல்படுத்திய விதம், எங்களை கேள்வி கேட்க வைக்கிறது. இதுதொடர்பாக வரும் மார்ச் 25ஆம் தேதி அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டனர்.
மேலும் பதில் மனு தாக்கல் செய்யும் வரை அமலாக்கத்துறை எந்த கடும் நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என உத்தரவிட்டு நீதிபதிகள் வழக்கை ஒத்தி வைத்தனர்.