அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள்: தடை விதிக்க மறுப்பு!

Published On:

| By Kavi

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களைத் ரத்து செய்யக் கேட்டு ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்த மனு மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (மார்ச் 3) நடைபெற்றது.

கடந்த ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதுபோன்று பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாக சிவில் வழக்கைத் தொடரலாம் என்று தெரிவித்திருந்தது.

இந்நிலையில் ஜூலை 11ஆம் தேதி நடந்த பொதுக்குழு தீர்மானங்கள் செல்லாது என உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளரும், எம்.எல்.ஏ.வு.மான மனோஜ் பாண்டியன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

அதில், எடப்பாடி பழனிசாமியை இடைக்காலப் பொதுச் செயலாளராக நியமித்தது, ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் உள்ளிட்டோர்களை நீக்கியது உள்ளிட்ட தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு இன்று நடைபெற்றது.

மனோஜ் பாண்டியன் தரப்பில் வழக்கறிஞர்கள் குரு கிருஷ்ணகுமார், எஸ்.இளம்பரிதி உள்ளிட்டோர் ஆஜராகி வாதிட்டனர்.

“பிப்ரவரி 23ஆம் தேதி உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் தான் இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

அதிமுக கட்சி விதிகள்படி உறுப்பினர்களை நீக்கும் அதிகாரம் பொதுக்குழுவுக்கு இல்லை. உறுப்பினர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைதான் எடுக்க முடியுமே தவிர நீக்குவதற்கு அதிகாரம் இல்லை.

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்குத்தான் அதிகாரம் இருக்கிறது.

ஆனால் ஜூலை 11 பொதுக்குழுவில் சிறப்புத் தீர்மானம் போட்டு, எந்த நோட்டீஸும் கொடுக்காமல் சட்ட விரோதமாக நீக்கியுள்ளனர். உச்ச நீதிமன்ற தீர்ப்பு காரணமாகச் சட்டமன்றத்தில் பங்கேற்க முடியாத நிலை ஏற்படும்.

ஆகையால் அதிமுக உள்ளிட்ட எதிர்த்தரப்பு வாதங்களைக் கேட்காமல் ஜூலை 11ஆம் தேதி கொண்டுவரப்பட்ட தீர்மானங்களுக்குத் தடை விதிக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

இதை விசாரித்த நீதிபதி எதிர்த்தரப்பு வாதங்களைக் கேட்காமல் எப்படி இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியும் என்று கேள்வி எழுப்பினார்.

இந்த வழக்கு தொடர்பாக ஈபிஎஸ் தரப்பினர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மார்ச் 17ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

பிரியா

காலநிலை அறிவு இயக்கம்: முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு!

குறைந்த தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share