சென்னையை புயலும் மழை வெள்ளமும் உலுக்கிப் போய் சுமார் பத்து நாட்கள் கழித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று (டிசம்பர் 12) தலைமைச் செயலகத்தில் ஓர் ஆய்வுக் கூட்டத்தை நடத்தியிருக்கிறார். இதுதான் அதிகாரிகள் மத்தியில் இப்போது விவாதப் பொருளாகியிருக்கிறது.
டிசம்பர் 3, 4 தேதிகளில் மிக்சாங் புயல் காரணமாக சென்னையில் பெய்த பெருமழையால் வெள்ளப் பெருக்கெடுத்து கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. நான்கைந்து நாட்களில் வெள்ளம் வடிந்த நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறாயிரம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின். இதற்கான டோக்கன் வழங்கும் பணி 16 ஆம் தேதி தொடங்குகிறது.
இதற்கிடையே இந்த வெள்ளத்துக்கான காரணம் குறித்த அரசியல் மோதல்களும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த வகையில் மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் வெள்ள பாதிப்பை பார்வையிட சென்னை வந்தபோது நடந்த பாஜக நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சியின் மாநிலச் செயலாளரும் சென்னையின் முன்னாள் பொறுப்பு மேயருமான கராத்தே தியாகராஜன் புதிய கோணத்தில் இப்பிரச்சினையை அணுகினார்.

“ஒருநாள் மழைக்கே இவ்வளவு பிரச்சினைகளை சொல்கிறார்கள். அதிகாரிகளும் மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொண்டுவிட்டதாக சொல்கிறார்கள். ஆனால் இந்த வெள்ளத்துக்கு காரணமான ஒரு அமைச்சர் மட்டும் எட்டியே பார்க்கவில்லை. அவர் தான் இந்த வெள்ளத்துக்கு பொறுப்பு.
சென்னையில் மழைநீர் வடிகால் வழியே வெள்ள நீர் சென்றால் கூட அது 16 கால்வாய்களுக்குள் ஸ்மூத்தாக செல்லவில்லை. கூவம், அடையாற்றுக்கு தண்ணீர் செல்ல வேண்டும். இதற்கு மாநகராட்சி மட்டும் பொறுப்பு கிடையாது. இதற்கு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தான் பொறுப்பு.
சென்னையில் இருக்கும் 16 கால்வாய்களிலும், 3 ஆறுகளிலும் தூர் வாரப்படவில்லை. முழுமையாக இந்த 16 கால்வாயில் நீரோட்டம் போகவில்லை. கேப்டன் காட்டன் , மாம்பலம் உள்ளிட்ட கால்வாய்களில் தண்ணீர் போகாததற்கு காரணம் தூர்வாராததுதான். இதற்கு நீர் மேலாண்மை துறை செயலாளர்கள், அதிகாரிகள்தான் பொறுப்பு. செம்பரம்பாக்கம், புழலுக்கு மட்டும் சென்று துரைமுருகன் போஸ் கொடுத்துவிட்டு சென்றுவிட்டார். வெள்ளத்துக்கு பொறுப்பேற்று துரைமுருகன் ராஜினாமா செய்ய வேண்டும். இல்லை என்றால் அவரை முதல்வர் பதவிநீக்கம் செய்ய வேண்டும்” என்று பேசியிருந்தார் கராத்தே தியாகராஜன். இதுகுறித்து டிசம்பர் 9 ஆம் தேதி மின்னம்பலத்தில் போஸ் கொடுக்கும் துரைமுருகனே வெள்ளத்துக்குக் காரணம்; கராத்தே காட்டம்! என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
இதற்குப் பிறகு மின்னம்பலம் யு ட்யூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியிலும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மத்தியில், நீர்வளத்துறையின் பொறுப்பின்மை பற்றிய புலம்பல்கள் அதிகமாக இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். வெறும் ஜேசிபி, பொக்லைன்களை பயன்படுத்தாமல் மும்பையில் இருப்பதை போல ராட்சத இயந்திரங்கள் மூலம் முகத்துவாரங்களில் இருக்கும் அடைப்புகளையும், ஆறு ஏரிகளிலும் இருக்கும் அடைப்புகளையும் அகற்றி ஆழப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார் கராத்தே தியாகராஜன்.
இந்த நிலையில்தான் நேற்று (டிசம்பர் 12) தலைமைச் செயலகத்தில் நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் திடீரென ஓர் ஆய்வுக் கூட்டம் நடந்தது.

சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் செம்பரம்பாக்கம், புழல், சோழவரம், பூண்டி மற்றும் பிற ஏரிகளிலும் அடையாறு, கூவம், கொசஸ்தலை ஆறுகள் மற்றும் பக்கிங்காம் கால்வாய் உள்ளிட்ட நீர் வழித் தடங்களில் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்பு பற்றி ஆய்வு மேற்கொண்டிருக்கிறார் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் நீர்வளத்துறை செயலாளரான சந்தீப் சக்சேனா, நீர்வளத்துறை முதன்மை தலைமைப் பொறியாளர் முத்தையா, சென்னை மண்டல தலைமைப் பொறியாளர் அசோகன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டிருக்கிறார்கள்.
இதுகுறித்து கோட்டை வட்டாரத்திலும் மாநகராட்சி அதிகாரிகள் வட்டாரத்திலும் பேசினோம்.
”இந்த புயல் வெள்ள சீசனில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தனது துறை ரீதியாக நடத்திய முக்கியமான மட்டுமல்ல முதல் ஆய்வுக் கூட்டமும் இதுதான்.
புயல் பாதிப்புக்குப் பின் டிசம்பர் 7ஆம் தேதி செம்பரம்பாக்கம் , புழல் ஏரிகளை பார்வையிட்டார் அமைச்சர் துரைமுருகன். அப்போது, ‘கடலில் அதிகம் அலை இருப்பதால் முதலில் கடல் வாங்கவில்லை. இப்போது வாங்குகிறது’ என்று வெள்ளத்துக்கு காரணம் சொன்னார்.
அதுமட்டுமல்ல… ‘நானும் இந்த இலாகாவை இருபது வருஷமா பாத்துக்கிட்டிருக்கேன். அடையாறில் செய்த திட்டங்கள்தான் தண்ணீர் கரை மீது ஏறி வரவில்லை. ஏரிகளை அப்படியே பல வருஷமா தூர்வாராம விட்டுட்டாங்க. இப்பதான் டிரிபிள் ஆர் என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். ஏரிகளுக்கும் எந்த காலத்திலோ போடப்பட்ட ஷெல்டர்கள், மதகுகள் இத்துப் போய்விட்டன. ஷெல்டரை கதவுகளை சரிபண்ண நடவடிக்கை எடுத்துள்ளோம்’ என்றெல்லாம் சொல்லுகிறார். கடந்த இருபது வருடங்களில் இவர் இவற்றை சரி செய்ய எடுத்த நடவடிக்கை என்ன என்ற கேள்வியும் அவருடைய பேச்சில் இருந்தே எழுகிறது. மேலும் சென்னைக்கு வெளியே புதிய ஏரியை உருவாக்க முயற்சித்து வருகிறோம் என்றும் துரைமுருகன் சொல்லியுள்ளார். இருக்கும் ஏரிகளின் நிலையை அவரே ஒப்புக் கொண்டுவிட்ட பிறகு புதிய ஏரியை பற்றிய பேச்சு சாத்தியமற்றதாக இருக்கிறது.
உண்மையில் சென்னை மாநகரத்தில் வெள்ளம் என்றால் ஊடகங்கள் முதல் பொதுமக்கள் வரை சென்னை மாநகராட்சியை மட்டுமே குறை சொல்கிறார்கள். மூன்று ஆறுகளையும் ஏராளமான ஏரிகளையும் சென்னைக்குள்ளே நிர்வகிக்கும் நீர்வளத்துறை என்ன செய்துகொண்டிருக்கிறது என்பதை யாருமே கேட்கவில்லை.
முன்னாள் பொறுப்பு மேயர் என்ற அடிப்படையில் சென்னை மாநகராட்சியில் பலருடன் இன்றளவும் நல்ல தொடர்பில் இருக்கிறார் கராத்தே தியாகராஜன். அந்த வகையில் அதிகாரிகளுடன் பேசியபோதுதான் இதுபற்றி கொட்டித் தீர்த்திருக்கிறார்கள். அதைத்தான் அவரும் பொது வெளியில் பேசினார்.

அதிமுக கூட இவ்வளவு விவரமாக பேசவில்லை. பாஜக இந்த பிரச்சினையை கையிலெடுத்தவுடன் முதலமைச்சரும் இதுகுறித்து விசாரித்திருக்கிறார். இதற்குப் பிறகுதான் டிசம்பர் 12 ஆம் தேதி சென்னை ஏரிகள், ஆறுகளில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு பற்றி ஆய்வு நடத்துகிறார் துரைமுருகன். இதையெல்லாம் முன்பே செய்திருந்தால் வெள்ள பாதிப்புகளை இன்னும் குறைத்திருக்கலாம்” என்கிறார்கள் நீர்வளத்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் வட்டாரத்தில்.
சென்னை ஏரிகள், ஆறுகளுக்கு விடியல் வருமா?
–வேந்தன்
Video: அடிச்ச அடியில இப்படி நொறுங்கி போச்சே… மன்னிப்பு கேட்ட ரிங்கு சிங்!
இணையத்தில் ட்ரெண்டாகும் ‘Thala For A Reason’: காரணம் என்ன?
