சென்னை மாநகராட்சியில் புதிதாக இணைக்கப்பட்ட மண்டலங்களின் பெயர்கள் வெளியாகியுள்ளது. Chennai corporation New proposed
தற்போது சென்னை மாநகராட்சியில் திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அம்பத்தூர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் ஆகிய 15 மண்டலங்கள் உள்ளன.
இந்தநிலையில், சென்னை மாநகராட்சியின் தற்போதைய மண்டலங்களின் நிர்வாகப் பகுதிகளை சீரமைத்து மண்டலங்களின் எண்ணிக்கையை 15-லிருந்து, 20-ஆக உயர்த்தி முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று (பிப்ரவரி 28) உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பான வெளியான செய்திக்குறிப்பில், “சென்னை மாநகராட்சியானது தற்போது 15 மண்டலங்களில் 200 வார்டுகளை கொண்டுள்ளது. மாநகராட்சியின் எல்லைகளுக்குள் சட்டப்பேரவையின் 22 தொகுதிகள் உள்ளடங்கியுள்ள நிலையில், சென்னை மாநகராட்சியின் மண்டலத்தின் நிருவாக எல்லைகளும் சட்டப்பேரவைத் தொகுதிகளின் எல்லைகளும் தற்போது ஒருசேர அமையவில்லை.

இதன் காரணமாக, பல்வேறு நிருவாக சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டிய நிலையில், சென்னை மாநகராட்சியின் மண்டலங்களுக்குட்பட்ட நிருவாக பகுதிகளை தற்போதைய மக்கள் தொகை, வாக்காளர் பட்டியல், சாலை பட்டியல், சாலை அடர்த்தி மற்றும் வரி மதிப்பீடுகள் போன்ற காரணிகளைக் கருத்தில் கொண்டு மாநகராட்சியின் நிருவாக எல்லைகளை மாற்றியமைப்பதென அரசு முடிவு செய்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், ஏற்கனவே உள்ள 15 மண்டலங்களில் மணலி மண்டலமானது திருவொற்றியூர், மாதவரம் மண்டலங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.
தற்போது புதிதாக, கொளத்தூர், வில்லிவாக்கம், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி, தி.நகர், விருகம்பாக்கம், பெருங்குடி – சோழிங்கநல்லூர் ஆகிய ஆறு மண்டலங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. மொத்தமாக சென்னை மாநகராட்சியானது 20 மண்டலங்களாக உயர்த்தப்பட்டுள்ளது. Chennai corporation New proposed