சென்னை மாநகராட்சியில் மழைநீர் தேங்கக்கூடிய 180 இடங்கள் கண்டறியப்பட்டு கூடுதல் கவனம் செலுத்த மாநகராட்சி நிர்வாகம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
இன்று (அக்டோபர் 14) காலை 5.30 மணியளவில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் அக்டோபர் 15-ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் நிலவக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்துள்ளது.
இதன்காரணமாக, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் உள்மாவட்டங்களில் இன்று (அக்டோபர் 14) முதல் அக்டோபர் 17 வரை கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனையடுத்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அப்போது சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு நாளை விடுமுறை அளிக்க வேண்டும், ஐடி ஊழியர்களை மூன்று நாட்கள் வீடுகளில் இருந்து பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
இந்தநிலையில், சென்னையில் வெள்ளம் பாதிக்கப்படக்கூடிய இடங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று மாநகராட்சி நிர்வாகம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 43 இடங்களில் மழைநீர் இணைப்பு பணிகள் நிறைவடையாததால், பணிகளை விரைந்து முடிக்க மாநகராட்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. அதேபோல, மெட்ரோ ரயில் பணிகள் நடக்கும் 25 இடங்கள் உள்பட 180 வெள்ள அபாய இடங்கள் கண்டறியப்பட்டு கூடுதல் கவனம் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கனமழை: சென்னைக்கு மட்டும் தான் ஸ்பெஷல் கவனமா? – எடப்பாடி ஆதங்கம்!