சென்னை மாநகராட்சி மேயர் பிரியா 2025 – 2026-ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை இன்று (மார்ச் 19) சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள மாமன்ற அலுவலகத்தில் தாக்கல் செய்து புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். Chennai corporation budget announcement
சென்னை மாநகராட்சி பட்ஜெட் முக்கிய அறிவிப்புகள்!
சென்னை பள்ளிகளில் 9ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்கள் ஆங்கிலப் பேச்சாற்றலை வளர்த்துக்கொள்ளவும், நேர்முகத் தேர்வுகளை எதிர்கொள்ளும் விதமாக அவர்களுக்கு MEPSC சான்றிதழ் பெற்ற பயிற்சியாளர்களின் வாயிலாக வரும் கல்வி ஆண்டில் பயிற்சி வழங்கப்படும். இதற்கென ரூ.20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்.

பெருநகர சென்னை மாநகராட்சியில், அனைத்து மயான பூமிகளிலுள்ள தகன மேடைகளுக்கு தடையின்றி மின்சாரம் கிடைக்க ஏதுவாக மின்னாக்கிகள் (Generator) ரூ.15 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும். மேலும், இவற்றிற்குத் தேவையான எரிபொருள் கொள்முதல் செய்வதுடன் தொடர் பராமரிப்பும் மேற்கொள்ளப்படும்.
முதியோர்களின் நலன் பேணும் வகையில் முதற்கட்டமாக, வடக்கு வட்டாரத்தில் பி.ஆர்.என் கார்டன், மத்திய வட்டாரத்தில் செம்பியம் மற்றும் தெற்கு வட்டாரத்தில் துரைப்பாக்கம் ஆகிய இடங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் தலா மையத்திற்கு ரூ.30 லட்சம் வீதம் 3 மையத்திற்கு ரூ.90 லட்சம் செலவில் முதியோர்களுக்கென தனிப் பிரிவு புதியதாக தொடங்கப்படும். இப்பிரிவில் ஒரு மருத்துவ ஆலோசகர், ஒரு இயன்முறை சிகிச்சை நிபுணர் மற்றும் இரண்டு உதவியாளர்கள் பணியாற்றுவார்கள்.
பெருநகர சென்னை மாநகராட்சியில், தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம் மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்களின் ஒத்துழைப்புடன் ரூ.3 கோடி செலவில் ரூ.1.80 லட்சம் தெரு நாய்களுக்கு வெறிநாய்க்கடி நோய்த் தடுப்பூசி மற்றும் ஒட்டுண்ணி நீக்கும் மருந்து செலுத்தப்படும்.
பெருநகர சென்னை மாநகராட்சியில் பல்வேறு பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டு வரும் டீசல் மற்றும் பெட்ரோல் வாகனங்களினால் ஏற்படும் காற்று மாசினை கட்டுப்படுத்தும் விதமாக, அவ்வாகனங்கள் படிப்படியாக இயற்கை எரிவாயு (CNG) மற்றும் மின்சாரம் (EV) மூலம் இயங்கும் வாகனங்களாக மாற்றம் செய்யப்படும்.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள பூங்காக்களில் மக்கள் அதிகமாக பயன்படுத்தும் 70 எண்ணிக்கையிலான பூங்காக்களில் பொதுமக்கள் பயன் பெறும் வகையில், பூங்காவின் ஒரு பகுதியில் கூரை அமைத்து இருக்கை வசதியுடன் கூடிய புத்தகம் வாசிப்பு மண்டலங்கள் (Reading zone) ரூ.2 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
2025–2026 ஆம் நிதியாண்டு முதல் பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் சிறப்பு மேம்பாட்டு நிதி ரூ.3 கோடியிலிருந்து ரூ.4 கோடியாக உயர்த்துவதற்கும், இந்நிதியில் மேற்கொள்ளப்படும் புதிய பணிகள் குறித்து உரிய வழிகாட்டுதல்களை மேற்கொள்வதற்கு அரசுக்கு முன்மொழிவு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
2025 – 2026 ஆம் நிதியாண்டு முதல் பெருநகர சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்களின் வார்டு மேம்பாட்டு நிதி ரூ.50 லட்சத்திலிருந்து ரூ.60 லட்சமாக உயர்த்தப்படும். Chennai corporation budget announcement