செஸ் ஒலிம்பியாட்: 90% பணிகள் நிறைவு – அமைச்சர் மெய்யநாதன்

Published On:

| By Minnambalam

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான 90 சதவிகிதம் பணிகள் நிறைவடைந்து விட்டதாகவும் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக அனைத்து பணிகளும் நிறைவு பெற்றுவிடும் என்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரம் பூஞ்சேரி கிராமத்தில் உள்ள போர் பாயிண்ட்ஸ் ஷெரட்டன் நட்சத்திர விடுதியில் வருகிற 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடக்கிறது. இந்தப் போட்டியில் இந்தியா, நார்வே, பிரான்ஸ், ஜெர்மனி, அர்ஜென்டினா, ஸ்பெயின் உள்பட 187 நாடுகளைச் சேர்ந்த இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.
இந்தப் போட்டிக்கான ஏற்பாடுகளை தமிழக அரசு வெகு விமரிசையாக மேற்கொண்டு வருகிறது. செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக அமைக்கப்பட்டுள்ள நவீன அரங்கம், விளையாட்டு வீரர்களுக்கு செய்யப்பட்டு இருக்கும் அடிப்படை வசதிகள் உள்ளிட்டவைகளை விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் நேற்று (ஜூலை 23) நேரில் பார்வையிட்டார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான 90% பணிகள் நிறைவடைந்துவிட்டது. செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக அனைத்து பணிகளும் நிறைவு பெற்றுவிடும்” என உறுதியளித்தார். மேலும், இந்தப் போட்டியில் தமிழகத்தில் இருந்து ஏழு வீரர்கள் பங்கேற்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.  

– ராஜ்

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share