விபத்தில்லா புத்தாண்டை கொண்டாடிய சென்னை

Published On:

| By Kavi

2026 ஆம் புத்தாண்டு விபத்தில்லா புத்தாண்டு என்று சென்னை மாநகர காவல் துறை கூறியுள்ளது.

2026 ஆம் ஆண்டை வரவேற்க நேற்று இரவு சென்னையில் மெரினா, பெசன்ட் நகர் போன்ற பொது இடங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

ADVERTISEMENT

கேக் வெட்டி ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து தெரிவித்து அன்பை பகிர்ந்து புத்தாண்டை வரவேற்றனர்.

புத்தாண்டை முன்னிட்டு சென்னை முழுவதும் 19000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

ADVERTISEMENT

பொதுமக்களின் பாதுகாப்பு கருதி முக்கிய சாலைகளில் வாகனங்கள் தடை செய்யப்பட்டு, மேம்பாலங்கள் எல்லாம் மூடப்பட்டன.

மாநகர் முழுவதும் 425 இடங்களில் வாகனச் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டன. சென்னை, தாம்பரம் மற்றும் ஆவடி ஆகிய மூன்று காவல் ஆணையரக எல்லைகளிலும் 400-க்கும் மேற்பட்ட வாகன சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, சந்தேகப்படும் வாகனங்கள் கண்காணிக்கப்பட்டன. மேலும், 30 இருசக்கர வாகன ரோந்துப் படைகள் இரவு முழுவதும் ரோந்துப் பணியில் ஈடுபட்டன.

ADVERTISEMENT

பட்டாசுகள் வெடிக்க கூடாது, மது அருந்திவிட்டு வாகனங்களை இயக்கக் கூடாது, ரேஸ் செல்லக்கூடாது, ஈசிஆர் ரிசார்டுகளில் 12:30 மணிக்கு மேல் எந்த நிகழ்ச்சிகளையும் நடத்தக்கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் இந்த புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றது.

இந்த சூழலில் 2026-ஆம் புத்தாண்டு விபத்தில்லா புத்தாண்டு என்று சென்னை மாநகர காவல் துறை கூறியுள்ளது.

நேற்றிரவு சென்னையில் எந்த இடத்திலும் விபத்தால் உயிரிழப்பு, குற்றச்சம்பவங்கள் நடக்கவில்லை.

உரிய முறையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு இருந்ததால் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது எந்தவித அசம்பாவிதமும் நடைபெறவில்லை என்று சென்னை மாநகர காவல் துறை கூறியுள்ளது. 

2026 ஆங்கில புத்தாண்டை வரவேற்று நள்ளிரவு 12 மணிக்கு D6 அண்ணா சதுக்க காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காமராஜர் சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை சந்திப்பு அருகில்  பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுடன் சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் மற்றும் அவரது மனைவி  யமுனாதேவி ஆகியோர் கேக் வெட்டி புத்தாண்டை கொண்டாடினர் என்பது குறிப்பிடத்தக்கது. 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share