அண்ணா பல்கலை மாணவி வழக்கு : குற்றப்பத்திரிகை தாக்கல்!

Published On:

| By Kavi

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் மீது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வுக்குழு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. Chargesheet filed in Anna University student case

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த டிசம்பர் 23ஆம் தேதி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். 

இந்த வழக்கில் சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

சென்னை உயர் நீதிமன்ற வழிபாட்டுதல்படி மூன்று பெண் ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

இந்த குழு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்தும், எப்.ஐ.ஆர் லீக் ஆனது குறித்தும் தனி தனியாக விசாரித்து வருகிறது.

இந்த சூழலில் இன்று (பிப்ரவரி 24) ஞானசேகரன் மீது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வு குழு ஆன்லைன் வாயிலாக முதல் கட்ட குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளது. 

மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் ஞானசேகருக்கு மட்டுமே தொடர்புள்ளது என குற்றப்பத்திரிக்கையில் போலீசார் தெரிவித்திருக்கின்றனர். 

மேலும் இவ்வழக்கில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் ஞானசேகரனின் செல்போன் உரையாடல்கள் அனைத்தும் குற்றப்பத்திரிக்கையில் இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் வருகின்றன. 

முன்னதாக ஞானசேகரன் செல்போனில் பேசிய ஆடியோ ஆதாரங்களை உறுதி செய்யும் வகையில் மெரினா கடற்கரை கலங்கரை விளக்கம் எதிரே உள்ள அரசு தடயவியல் துறை கூடத்தில் மூன்று மணி நேரம் குரல் பரிசோதனை செய்யப்பட்டது.

அதுபோன்று ஸ்டான்லி மருத்துவமனையில் ரத்த பரிசோதனை நடத்தப்பட்டது. 

இவ்விரண்டும் பாலியல் வழக்கில் முக்கிய தடயமாக பார்க்கப்படுகிறது, இவ்வாறு அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தி வரும் சிறப்பு புலனாய்வு குழு இன்று குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளது.  Chargesheet filed in Anna University student case

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share