செந்தில் பாலாஜி வழக்கு: மத்திய குற்றப் பிரிவு போலீஸ் குற்றப்பத்திரிகை தாக்கல்!

Published On:

| By Kavi

Charge sheet Filed against Senthil Balaji

போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கி தருவதாகக் கூறி பணமோசடி செய்த வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக கூடுதல் குற்றப்பத்திரிகையைச் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை தாக்கல் செய்துள்ளது.

அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி,  2011-15 வரையிலான ஆண்டுகளில் அத்துறையில் வேலை வாங்கி தருவதாகக் கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாகச் சென்னை காவல் ஆணையரிடம் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது

இந்த புகாரின் பேரில் செந்தில் பாலாஜி மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

செந்தில் பாலாஜி, அவரது நண்பர்கள் பிரபு, சகாயராஜன், தேவசகாயம், அன்னராஜ் உள்ளிட்ட 46 பேர் மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் 2015ஆம் ஆண்டு வழக்குகளைப் பதிவு செய்தனர்.

அதனடிப்படையில் அமலாக்கத் துறையும் செந்தில் பாலாஜி மீது சட்ட விரோத பணப் பரிமாற்ற  வழக்குப்பதிவு செய்தது.

இதனிடையே உச்ச நீதிமன்றம் மே மாதம், செந்தில்பாலாஜி மீதான வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று மத்திய குற்றப் பிரிவு போலீஸாருக்கு உத்த்தரவிட்டது.  இதையடுத்து விரிவான விசாரணை மேற்கொள்ள 6 மாதங்கள் அவகாசம் கேட்டு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், அஸானுதீன் அமானுல்லா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.

அப்போது 6 மாதங்கள் கால அவகாசம் வழங்க மறுத்த நீதிபதிகள், காவல் துறை நினைத்தால் 24 மணி நேரத்திலும் வழக்கை முடிப்பீர்கள், 24 ஆண்டுகளானாலும் வேலையை முடிக்காமல் இழுப்பீர்கள் என்று கண்டனம் தெரிவித்தனர்.

அதோடு செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் வழக்கை முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

இந்தப் பின்னணியில், உச்ச நீதிமன்றம் விதித்த காலக்கெடுவின் கடைசி நாளான இன்று (செப்டம்பர் 30)  செந்தில் பாலாஜி வழக்கு விசாரணை நடந்து வரும் சென்னை எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

இந்த வழக்கில் இன்னும் சிலரை விசாரிக்க அனுமதி மற்றும் ஒப்புதல் கடிதம் கிடைக்கவில்லை எனவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணமோசடி செய்தது தொடர்பாகச் செந்தில் பாலாஜி, அவரது நண்பர்கள், பொறியாளர்கள் என 40க்கும் மேற்பட்டோர் மீது குற்றப் பத்திரிகையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

இந்த வழக்கு விசாரணை அக்டோபர் 5ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதே விவகாரத்தில் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு 7ஆவது முறையாக அக்டோபர் 13 வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரியா

இந்த வார டாப் 10 :  உங்களுக்கு பிடித்த சீரியல்கள் இருக்கிறதா?

விஜய் குரலில் பரவும் ஆடியோ : புஸ்ஸி ஆனந்த் மறுப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share