கருணாகரன். திரையில் இவர் முகம் தெரிந்தவுடன் பார்வையாளர்கள் மனதில் கலவையான உணர்ச்சிகள் எழும். ‘இந்த படத்துல இவரு காமெடியனா, கேரக்டர் ஆர்ட்டிஸ்டா, ஆன்ட்டி ஹீரோவா, இல்லேன்னா ஹீரோவா’? என்ற கேள்வியே அவர்களிடத்தில் பிரதானமாக இருக்கும். அக்கேள்விகளுக்குப் பதில் தெரியாதபோதும், அவரது நடிப்பையே ரசிக்கத் தொடங்குவார்கள். அதற்குக் காரணம், எந்த பாத்திரமானாலும் ‘அசால்ட்’ செய்யும் கருணாகரனின் நடிப்புத் திறமை. character artist karunakaran special
அது பற்றிப் பத்திரிகையாளர்கள் எத்தனை முறை கேட்டாலும், வேறொரு நபரைப் பற்றிப் பேசுவது போலத்தான் இருக்கும் அவர் பதில் கூறும் பாங்கு. அந்த பாணி தான், அவரது நடிப்பிலும் கலந்திருக்கும்.
பொதுமேடைகளில் கலந்துகொண்டாலும், திரையில் கண்டாலும், கருணாகரன் இருப்பு நமக்குள் உருவாக்கும் உணர்வு கலவையானதாகத் தான் இருக்கும். ஆனாலும் நாம் ரசிப்போம், சிரிப்போம், அவரது திறமையை மெச்சுவோம். அதுதான் கருணாகரனின் சிறப்பம்சம்.
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், வார்த்தைகளுக்குள் வரையறுக்க முடியாத நடிப்புத் திறமைக்குச் சொந்தக்காரர் கருணாகரன்.
நடிப்பின் மீதான ஆர்வம் இவருக்குள் சிறு வயதிலேயே துளிர் விட்டாலும், சொந்தக்காலில் நிற்கும் பக்குவம் வந்தபிறகே அந்த திசையில் காலடி எடுத்து வைத்தது ஆர்வக்கோளாறில் அலறித் துடிக்கிற ‘இன்ஸ்டாரீல்ஸ் இளையோருக்கான’ ஒரு உதாரண பாடம்.

திருச்சியைப் பூர்வீகமாகக் கொண்டவர் கருணாகரன். தந்தை அரசு அதிகாரியாகப் பணியாற்றியவர். அதனால், புதுடெல்லியில் இவரது பால்ய காலம் கழிந்தது. இவரது பதின்ம வயதுகளில் திருச்சிக்கு பெற்றோர் இடம்பெயர்ந்தனர்.
பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு வேதியியல் பொறியியல் படித்தார் கருணாகரன். பல்வேறு துறைகளில் பொறியியல் படித்தவர்கள், நான்காண்டுகளின் முடிவில் தகவல் தொழில்நுட்பத்துறையில் பணியைத் தேர்ந்தெடுப்பது போன்று, இவரும் அத்துறையில் வேலைவாய்ப்பினைப் பெற்றார்.
பன்னாட்டு நிறுவனத்தில் நல்லதொரு சம்பளத்தில் பணி. வசதி வாய்ப்புகள் மிகுந்ததொரு வாழ்வு. ஆனாலும், கருணாகரனின் கவனமும் ஆர்வமும் நடிப்பின் மீதே இருந்தது. அதனை ஈடு செய்கிற வாய்ப்புகள் அரிதாகவே வாய்த்தன. அந்த காலகட்டத்தில், முழுக்க நடிப்புலகிலேயே இருந்தாலென்ன’ என்கிற எண்ணம் அவரைப் பற்றியிருந்தது.
அதற்கேற்றாற்போல, கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘நாளைய இயக்குனர்’ நிகழ்ச்சியில் இளம் இயக்குனர்களின் குறும்படங்களில் நடிக்கிற வாய்ப்பு கருணாகரனைத் தேடி வந்தது.
பள்ளி, கல்லூரி, பணி நிறுவனம் சார்ந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அனுபவமும், நடிப்பின் மீதான காதலும் அந்தக் குறும்படங்களில் அவரை நடிக்கச் செய்தன.
அதுவரை திரையில் காணாத பாவனைகள், உடல்மொழி, க்ளிஷேக்களை உடைக்கிற இருப்பு கருணாகரனின் நடிப்பில் வெளிப்பட்டது. அதுவே அவரைத் தனித்து அடையாளம் காட்டியது.
அதன் விளைவாகச் சில முன்னணி இயக்குனர்களின் அறிமுகத்தைப் பெற்றார் கருணாகரன். அதிலொருவர், இயக்குனர் சுந்தர்.சி.
அவர் இயக்கிய ‘கலகலப்பு’ படத்தில் ஒரு நகைச்சுவை பாத்திரத்தில் தோன்றினார் கருணாகரன்.

அந்த காலகட்டத்தில் குறும்படங்கள் தாண்டி தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்கத் தொடங்கியிருந்தார். ஆனாலும், திரைப்படங்களில் நடிப்பதே அவரது வேட்கையின் மையமாக இருந்தது. ’கலகலப்பு’ பெரிய கமர்ஷியல் வெற்றியாக அமைய, கருணாகரனின் முகமும் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானது.
கார்த்திக் சுப்புராஜின் ‘பீட்சா’, விஜய் சேதுபதி உட்படப் பலருக்குப் புதிய தொடக்கத்தைத் தந்தது. அந்த வகையில், அதில் நடித்த கருணாகரனின் பிரபல்யமும் அடுத்த படிக்கு நகர்ந்தது.
2013இல் வெளியான ‘சூது கவ்வும்’, ஒரு மிகப்பெரிய ஏணியில் ஏறிச் சிகரத்தை அடைந்த நிலையை கருணாகரனின் திரை வாழ்வில் உருவாக்கியது. அருமைப்பிரகாசம் என்ற பாத்திரத்தின் வார்ப்பு, அவர் ஆடிய ‘காசு பணம் துட்டு மணி மணி’ பாடல் கிளைமேக்ஸ் காட்சியில் அவரது நடிப்புக்குக் கிடைத்த வரவேற்பு என்று அப்படத்தில் அவர் நடித்த ஒவ்வொரு பிரேமும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.
தொடர்ந்து தீயா வேலை செய்யணும் குமாரு, யாமிருக்க பயமே, ஜிகர்தண்டா, கப்பல் என்று ஒவ்வொரு படத்திலும் கருணாகரனுக்கு வித்தியாசமான பாத்திரங்கள் கிடைத்தன. நகைச்சுவை என்பதைத் தாண்டி வித்தியாசமான காட்சிகளில் வேறுபட்ட முகங்களைக் காட்ட அவ்வாய்ப்புகள் வழி வகுத்தன.
’கருணாகரன் எந்த பாத்திரத்திலும் மிளிர்வார்’ என்ற நம்பிக்கையை ரசிகர்களிடத்திலும் திரையுலகைச் சார்ந்தவர்களிடத்திலும் உருவாக்கிய காலகட்டம் அது. அந்த வரிசையில், அவருக்குச் சிறப்பான இடத்தைத் தந்தது ரவிக்குமார் இயக்கிய ‘இன்று நேற்று நாளை’.

அதன் தொடர்ச்சியாக, ராதாமோகனின் ‘உப்புகருவாடு’ படத்தில் கதை நாயகனாக நடித்தார் கருணாகரன். அதேநேரத்தில், அடுத்தடுத்த படங்களில் நாயகனின் நண்பனாக, ஒரு சாதாரண பாத்திரமாக, ஓரிரு காட்சிகளில் வந்து செல்கிறவராக நடித்தார்.
அப்படிப்பட்ட முடிவுகள் நோக்கி ஒரு இளம் கலைஞன் நகர்வது சாதாரண விஷயமல்ல; தன்னம்பிக்கையும் தெளிவும் மிகுந்திருப்பவரால் மட்டுமே அதனைச் சாதிக்க முடியும். அது தன்னால் முடியும் என்று நிரூபித்தவர் கருணாகரன்.
ஒவ்வொரு ஆண்டும் சுமார் பத்து, பதினைந்து படங்களில் நடிப்பது எனும் வழக்கத்தைக் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாகப் பின்பற்றி வருகிறார் கருணாகரன். அவற்றில் பாதி படங்களாவது குறைந்தபட்சமாக அவரது முகத்தை நினைவூட்டும் வகையில் சிறப்பான வரவேற்பைப் பெற்று வருகின்றன.
’இந்த வகைமை கதைகளில் மட்டுமே நடிப்பேன்; இப்படித்தான் திரையில் தோன்றுவேன்; இதுமாதிரியான வசனங்களைப் பேசி நடிக்க மாட்டேன்’, இப்படி எந்த வரையறைக்குள்ளும் சிக்காதவர் கருணாகரன். அதுவே பல்வேறுபட்ட இயக்குனர்களின் படங்களில் அவர் இடம்பெறக் காரணமாக இருந்து வருகிறது.
நடிக்கும் பாத்திரத்திற்கு ஏற்பத் தன்னை உருமாற்றிக்கொள்ளும் வழக்கம் சில நடிகர்களிடம் உண்டு.
எந்த பாத்திரமாகத் தோன்றினாலும், அதில் நடிக்கும் கலைஞர்களின் சிறப்பியல்புகளைக் கண்டு ரசிகர்கள் மகிழ்வதுண்டு.
இரண்டாவது ரகத்தில் சேர்பவர்கள் காலம்காலமாக நினைவுகூரப்படுவார்கள். தனது நடிப்புத்திறன் மூலமாக, திரையுலகில் தனது காலடியைப் பதித்தபோதே இரண்டாவது ரகமாக அடையாளம் காணப்பட்டவர் கருணாகரன்.
தினசரி வாழ்வில் நம் எதிரே வந்து நிற்கும் ஒரு சாதாரண நபரைப் போலத் திரைப்படங்களில் தோன்றுவது அவரது சிறப்பம்சங்களில் ஒன்று. அந்த திறமை வாய்க்கப்பெற்றவர்கள் எக்காலத்திலும் சிறப்பான வரவேற்பை ரசிகர்களிடத்தில் பெறுவார்கள். புதிய திசைகளை நோக்கிப் பயணிப்பார்கள்.
அந்த வகையில், சுமார் பதினைந்து ஆண்டு கால அனுபவத்துடன் திரையுலகில் உலா வரும் கருணாகரன், தொடர்ந்து முத்திரை பதிக்கிற படைப்புகளில் இடம்பெற வேண்டும்; இப்போதும், எப்போதும் திரையரங்கில் மகிழத்தக்க தருணங்களைத் தனது நடிப்பின் வழியே தொடர்ந்து உருவாக்க வேண்டும். தன்னை ரசிக்கிற பார்வையாளர்களை மகிழ்விக்கும் பணியைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்..!